தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்!!

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள ஆடு விற்பனை வாரச் சந்தையில், தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மந்தமாக நடைபெற்றது.

First Published Oct 22, 2022, 5:05 PM IST | Last Updated Oct 22, 2022, 5:05 PM IST

சமயபுரம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடி அருகே பல ஆண்டுகளாக ஆட்டுச் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்டுச் சந்தைக்கு சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, பாடாலூர் உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் வெள்ளாடு, செம்மறி ஆடுகளை வாரந்தோறும் கொண்டு வந்து விற்பது வழக்கம். 

அவ்வாறு விவசாயிகள் விற்பனை செய்யும் ஆடுகளை திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் , தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகள் கடா ஆடுகளை விற்பனைக்காவும், கோட்டை ஆடுகள் மற்றும் ஆடு குட்டிகளை வளர்ப்பதற்காகவும் வாங்கி செல்வதை பல ஆண்டுகளாக வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வரும் 24 ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆட்டுக்கறி விற்பனைக்காக  பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் இந்த வாரச் சந்தையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை கொள்முதல் செய்தனர். வழக்கத்தைவிட அதிகளவில் ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு் வந்தனர். திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலிருந்தும் வேன் மற்றும் லாரிகளில் வியாபாரிகள் வந்திருந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

வழக்கத்தை விட வியாபாரம் குறைவாக இருந்ததாகவும், 50 சதவிகித ஆடுகள் விற்பனை ஆகவில்லை என்றும், ஆடுகளின் விலைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என்றும்,  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் வியாபாரம் மந்தமாக இருந்ததாகவும் வியாபாரிகளும், விற்பனையாளர்களும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!