திருப்பூரில் 500 ஆண்டுகள் பழமையான கோவிலில் சிவலிங்கத்தை சுற்றி படுத்திருந்த பாம்பு
தாராபுரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான விஸ்வேஸ்வரர் கோவிலில் உள்ள லிங்கத்தை சுற்றிய பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்துச் சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டைமேட்டுத் தெருவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த சில ஆண்டுகளாக வழிபாடு நடத்தப்படாமல் பூட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கோவிலுக்குள் ரத்த மண்டல வகையைச் சேர்ந்த பாம்பு ஒன்று செல்வதை கண்ட சிலர் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது பாம்பு கோவிலில் உள்ள லிங்கத்தை சுற்றியபடி படுத்துக் கொண்டது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், சுவாமியை சுற்றி படுத்திருந்த பாம்பிற்கு பால் ஊற்றி வணங்கினர். சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு அங்கிருந்து ஊர்ந்து செல்ல துவங்கியது.
இதனையடுத்து மக்கள் தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அந்தப் பாம்பை பிடித்து பிளாஸ்டிக் பைப்பிற்குள் அடைத்து வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். லிங்கத்தை சுற்றிய பாம்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.