Watch : நெல்லையில் 6 மாதமாக குடிநீர் பற்றாக்குறை! - காலி குடங்களுடன் திரண்ட பெண்கள்!
நெல்லை பாளையங்கோட்டையில் ஆறு மாதமாக குடிநீர் வராததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் செய்யப்போவதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சி 32வது வார்டில் கடந்த ஆறு மாதமாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் நிலத்தடி நீரும் இல்லாததால் பொதுமக்கள் அன்றாட தண்ணீர் தேவைக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 32வது வார்டில் உள்ள நந்தனார் தெரு, ஜோதிபுரம், லட்சுமி நரசிம்ம புரம் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கடந்த ஆறு மாதமாக குடிநீர் வரவில்லை என்றும், இதுகுறித்து வார்டு கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி காலி குடங்களுடன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பெண்கள் கூறும்போது, ''எங்கள் பகுதியில் கடந்த ஆறு மாதமாக குடிநீர் வரவில்லை. மேலும் நிலத்தடி நீரும் இல்லை. இதனால் நாங்கள் பணம் கொடுத்து குடிநீர் வாங்கிக் கொண்டிருக்கிறோம். லாரிகளில் வரும் தண்ணீரை ஒரு வீட்டிற்கு இரண்டு குடங்கள் என்ற அளவில் மட்டுமே வழங்குகின்றனர். குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித்தனர்.