Watch : விலங்குகளின் நலன் கருதி அதிக ஒலி தரும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்! - வனத்துறை வேண்டுகோள்!
தீபாவளி நெருங்குவதையொட்டி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர் மற்றும் நீலகிரி வனக் கோட்டங்களில் பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி அதிக ஒலி (சத்தம் ) தரும் ராக்கெட்,ஆட்டோ பாம் போன்ற பட்டாசுகளை வெடிக்க வேண்டாமென வனத்துறையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முதுமலை,தெப்பக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள வெளிமண்டல பாதையில் மசினகுடி,மாயார், சிங்கார,ஆனைக்கட்டி கிராமப்புற பகுதிகளை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் காணப்படுகிறது. இங்கு புலி,யானை, சிறுத்தை, மான், கரடி, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளும் மற்றும் எண்ணற்ற உள்நாட்டு பறவைகளும் வாழ்கின்றன.மேலும் தற்போது உள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப இனப்பெருக்கத்திற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் குடிபெயர்ந்துள்ளன.
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளின் வெடி சத்தத்தால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், இனப்பெருக்கத்திற்காக குடிபெயர்ந்துள்ள பறவைகள் பாதிக்கப்படும் என்பதாலும், இயற்கையை காக்கும் வகையில் தீபாவளி நாளன்று பட்டாசுகளை தவிர்த்து பசுமை தீபாவளியை கொண்டாட வேண்டும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் தனியார் விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் பட்டாசுகள் வெடித்து வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் நோக்கில் ஈடுபட கூடாது எனவும் மீறினால் வனச்சட்டப்படி நடவடிக்கை மேற்க் கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.