Video : உதகை மலை ரயில் புதிய டீசல் என்ஜினுடன் சோதனை ஓட்டம்!

நீலகிரி மலை இரயில் புதிய டீசல் எரிபொருள் மூலம் இயக்கப்படும் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக குன்னூர் இரயில் நிலையம் வந்தடைந்தது.
 

First Published Oct 13, 2022, 9:53 AM IST | Last Updated Oct 13, 2022, 9:53 AM IST

யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை இரயில் தற்போது ரூ.9.30 கோடி மதிப்பில், 70 பேர் கொண்ட குழுவினரால், 7 மாதங்களில், புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட ரயில் என்ஜின் இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது. யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த ஊட்டி மலை ரயிலில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் பயணம் செய்து, இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியில் உள்ள அழகிய காட்சிகளை கண்டு ரசித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

ஊட்டி மலையில் இயக்கப்படும் மலை ரயில், திருச்சி பொன்மலையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பர்னசல் ஆயில் மூலம் இயக்கப்பட்டு வந்த என்ஜின் சேவையில் ரயில் இயக்கப்படும் போது அதிக அளவில் புகை எழும்புவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் உலை ஆயிலுக்குப் பதிலாக, அதிவேக டீசல் பயன்படுத்தும் உள்நாட்டு தொழில் நுட்பத்துடன் தற்போது ரயில் என்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் என்ஜினை, ரூ.9.30 கோடி மதிப்பில் 70 பேர் கொண்ட குழுவினர், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, 7 மாதங்களில் வடிவமைத்துள்ளனர்.

அதிவேக டீசலை இருப்பு வைத்துக்கொள்ள 1,600 லிட்டர் கொள்ளளவு உள்ள டீசல் டேங்க் மற்றும் நிலக்கரி மூலம் நீராவி உருவாக்குவதற்கு, தண்ணீரை கொதிக்க வைக்க பயன்படுத்தப்படும் 4,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த புதிய ரயில் என்ஜினின் முன்பகுதியில் அதிக ஒளிரும் தன்மையுடன் கூடிய டிஜிட்டல் விளக்குகளும், என்ஜினின் உள்பகுதிளில் எல்இடி பல்புகளும் உள்ளன.

சிறப்பு ரயில் என்ஜின் வடிவமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு லாரி மூலம் ஊட்டிக்கு மலை ரயில் சேவைக்காக மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டு, சோதனை ஓட்டமாக ஹில்குரோ இரயில் நிலையம் வரை கடந்த மூன்று நாட்களாக என்ஜின் இயக்கப்பட்டது. இதில் காணப்படும் நிறை மற்றும் குறைகளை கருத்தில் கொண்டு, அடுத்தடுத்த ரயில் என்ஜின்களையும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதே பணிமனையில், புனரமைப்பு செய்யப்பட்ட ரயில் என்ஜின்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக தயார் செய்யப்பட்ட இரயில் என்ஜின் தனது முதல் மலைப்பாதையில் ரயில் சோதனை ஓட்டம் பயணத்தை துவங்கியது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இயக்கப்பட்ட ரயில் சோதனை ஓட்டத்தின் போது அனைத்து ரயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் சோதனை ஓட்டத்தின் போது பழுது ஏற்ப்படாமல் பார்த்து கொள்ள உடன் இருந்தனர்.

Video Top Stories