கூடலூர் வனப்பகுதியி்ல் டெட்டனேட்டர் வெடித்ததில் பரவிய காட்டுத்தீ!- அதிகாரிகள் ஆய்வு!
கூடலூர் நாடு காணி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீயில் 5 ஏக்கர் பரப்பளவிற்கு புல்வெளிகள் எரிந்து சாம்பலானது. காட்டு தீயின் நடுவே வெடி பொருட்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அதிக பனிப்பொழிவு காணப்படுவதால் பகல் வேளையில் அதிக வெயில் காணப்படுகிறது இதனால் செடிகள் புல்வெளிகள் பனியில் கருகி காய்ந்து கிடப்பதால் காட்டு தீ பரவும் நிலை ஏற்பட்டது.
கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ளதால் அப்பகுதி முழுவதும் மரம் செடிகள் புல்வெளிகள் காய்ந்து கருகி கிடைக்கும் நிலையில், கூடலூர் அருகே உள்ள நாடு காணி வனப்பகுதியில் ஐந்து ஏக்கர் புல்வெளிகள் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. இதனை அறிந்த பந்தலூர் வனச்சரகர் சஞ்சீவி தலைமையில் வனத்துறையினர் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது காட்டுத் தீயின் நடுவே பயங்கர வெடி சத்தம் கேட்டதாக தெரிகிறது, இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் தீ பற்றிய பகுதிகளை ஆய்வு செய்தபோது பாறைகளுக்கு வைக்கும் வெடிப்பொருள்கள் அப்பகுதியில் கருகி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது,
கூடலூர் நாடு காணி வனப்பகுதியில் தீ பற்றி புல்வெளிகள் எரிந்து சாம்பலான பகுதியில் வெடி பொருட்கள் வெடித்து சிதறியதை தொடர்ந்து தேவாலா டி எஸ் பி செந்தில் தலைமையில் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் மற்றும் காவல்துறையினர் மற்றும் வனத்துறை ஏ சி எப் கருப்பசாமி தலைமையில் வனத்துறையினரும் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்