தனியார் பேருந்துக்கு நிகராக அரசு பேருந்தை அழகுபடுத்திய ஓட்டுநர்; மேலாளரின் அதிரடியால் ஓட்டுநர்கள் வருத்தம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் போக்குவரத்துக் கழக பணிமனையில் தனியார் பேருந்துக்கு நிகராக அரசுப் பேருந்து ஓட்டுநரால் அழகுபடுத்தப்பட்ட நிலையில், பணிமனை மேலாளரின் திடீர் உத்தரவால் ஓட்டுநர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அண்மையில் ஒவ்வொரு போக்குவரத்து கோட்டத்திற்கும் தனித்தனியாக புதிய அரசு பேருந்துகள் வழங்கப்பட்டன. இதில் நீலகிரி மாவட்டத்திற்கு முதல்கட்டமாக 15 பேருந்துகள் வழங்கப்பட்டன. இதனை கடந்த 22ம் தேதி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ, ராசா, மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்நிலையில் குன்னூர் அரசு போக்குவரத்து கிளைக்கு இரண்டு பேருந்துகள் முதல்கட்டமாக வழங்கப்பட்டன. அதில் ஒரு பேருந்தானது உதகையில் இருந்து திருச்சி வரை இயக்கப்படும் பேருந்தாகும். இந்தப் பேருந்திற்கு ஓட்டுனர் தனது சொந்த பணத்தில் ரூபாய் 18 ஆயிரம் செலவு செய்து ஸ்டிக்கர் ஒட்டியதாகக் கூறப்படுகிறது.
ஸ்டிக்கர் ஒட்டும் பணியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை 21ம் தேதி இரவு, பகலும் ஒட்டும் பணிகள் நடைபெற்றன. இதில் குன்னூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள கோவிலின் படத்தை பேருந்தில் பின்பக்க கண்ணாடியில் ஒட்டியுள்ளார். பின்பு திங்கள் கிழமை பேருந்து திருச்சிவரை ஒரு முறை மட்டுமே சென்று வந்த நிலையில் உதகை போக்குவரத்து கழக பொது மேலாளர் நட்ராஜ் உடனடியாக திருச்சி பேருந்தில் ஒட்டி உள்ள ஸ்டிக்கர்களை அகற்றக் கூறி இருக்கிறார். இதனை தொடர்ந்து அவசர அவசரமாக ஒட்டிய ஸ்டிக்கர்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது தனியார் பேருந்துகளுக்கு நிகராக அரசு பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் புதிதாக வழங்கப்பட்ட பேருந்தில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை அகற்றக் கூறியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் அதுவும் சுற்றுலாத் துறை அமைச்சரின் சொந்த தொகுதியில் இந்த சம்பவம் நடந்திருப்பது வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துவிட்டதாக ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.