Asianet News TamilAsianet News Tamil

மயிலாடுதுறையில் தொடர்கதையாகி வரும் திடீர் பள்ளம்! சாலையில் 10 அடி ஆழத்திற்கு குழி விழுந்ததால் பரபரப்பு!

மயிலாடுதுறை நகரில் 10 அடி ஆழத்திற்கு திடீரென்று உள்வாங்கிய சாலையால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தை தவிர்ப்பதற்காக அவசரக்கதியில் மண்ணை அள்ளி போட்டு மூடும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

 

மயிலாடுதுறை நகரில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 15 ஆண்டுகளை கடந்த இந்த திட்டம் கட்டுமான பணிகளில் ஏற்பட்ட குறைபாடு மற்றும் போதிய பராமரிப்பு இல்லாத காரணமாக இதுவரை 14 க்கும் மேற்பட்ட முறை சாலைகளில் பாதாள சாக்கடை உள்வாங்கி மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. அவற்றை தற்காலிகமாக சீரமைப்பதும் தொடர்ந்து பாதாள சாக்கடை உள்வாங்குவதும் மயிலாடுதுறையில் தொடர்கதை ஆகி வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை நகரில் மையப்பகுதியில் புளியன் தெரு என்ற இடத்தில் சாலையில் 10 அடி ஆழத்திற்கு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனை அறிந்து அங்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அருகில் இருந்த மணல்மேட்டை கரைத்து அதை அதில் கொட்டி மூடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதாள சாக்கடை திட்டத்தால் ஏற்பட்ட பள்ளமா அல்லது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் மணல் கரைந்து சாலை உள்வாங்கியதா என்று தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதைப் பற்றியும் ஆராயாமல் அவசரகதியில் சாலையை மூடுவதால் மேலும் விபத்துக்கள் ஏற்படும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Video Top Stories