பத்திரிக்கையாளர்களுக்கும் விரைவில் பென்ஷன் திட்டம்! - அமைச்சர் சுவாமிநாதன் தகவல்!
மயிலாடுதுறையில் தமிழில் முதல் நாவல் எழுதிய வேதநாயகம் அவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பான இடத்தினை செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட ஆரோக்கியநாதபுரத்தில் அரசு சொந்தமான இடத்தில் தமிழில் முதல் நாவல் எழுதிய முன்சீப் வேதநாயகம் அவர்களுக்கு புதிய அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்பட உள்ள இடத்தினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சுமார் மூன்று கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த அரங்கத்தில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக அமையும். இதனிடையே அரங்கம் அமைப்பதற்கான வரைபடத்தை பார்வையிட்டு இடத்தினை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், விடுபட்டுள்ள பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய அட்டை எப்போது கொடுக்கப்படும் என்ற கேள்விக்கு தற்போது 2000 நலவாரிய அட்டைகள் முதற்கட்டமாக கொடுத்துக்கொண்டு இருப்பதாகவும் மற்றவர்களும் விரைந்து கொடுக்கப்படும் என தெரிவித்தார். தொலைக்காட்சி செய்தியாளர்களை பென்ஷன் திட்டத்தில் சேர்ப்பது குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து பரிசீலினையில் இருப்பதாகவும் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.