Watch : இறந்த கணவருக்கு வெண்கலத்தில் சிலை! மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!

மதுரையில் இறந்த கணவருக்கு வெண்கலத்தில் சிலை வைத்து வழிபட்ட மனைவி மற்றும் குடும்பத்தினர்., காண்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது
 

First Published Oct 21, 2022, 10:55 PM IST | Last Updated Oct 21, 2022, 10:55 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் இறந்த ஒச்சாத்தேவர் என்பவரின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் O.S.M.R என்ற பெயரில் டிரஸ்ட் அமைத்து., இறந்தவருக்கு தத்ரூபமாக வெண்கலத்தில் சிலை வைத்து வழிபட்டு உசிலம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய பொதுமக்களுக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒச்சாத்தேவர்., திருமங்கலத்தைச் சேர்ந்த சுந்தர செல்வி என்ற பெண்ணை மணந்து ஒரு மகன்., ஒரு மகள் என திருமங்கலம் பகுதியில் வாழ்ந்து வந்தார். மேலும்., மூவேந்தர் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பில் மாநில துணைத்தலைவராக பொறுப்பு வகித்து பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.

தொடர்ந்து., 2001 சட்டமன்ற தேர்தலில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துக்கு எதிராக போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். மேலும் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி இயற்கை மரணம் அடைந்தார். அவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் O.S.M.R என்ற பெயரில் டிரஸ்ட் அமைத்து பல்வேறு உதவிகள் செய்து வந்தனர்.

திருமங்கலம் பகுதி மக்களுக்கு ஆற்றிய தொண்டின் காரணமாக பலரும் இவரை நினைவு கூர்ந்து வரும் நிலையில்., இன்று அவரது 10-ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் இணைந்து வெண்கலத்தில் சிலை அமைத்து வழிபட்டனர். பின்னர் 100-க்கும் மேற்பட்ட ஏழை-எளிய மற்றும் கணவரை இழந்தோர்., ஆதரவற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

உசிலம்பட்டி., திருமங்கலம்., திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தையல் மெஷின்., 30-க்கும் மேற்பட்டோருக்கு இஸ்திரி பெட்டி., பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள்., மாணவ மாணவியர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் என 5 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

உயிரிழந்த கணவர் தன்னை விட்டு நீங்கவில்லை என்றும்., எல்லா நேரங்களிலும் எங்களை வழிநடத்தி செல்கிறார் என குடும்பத்தினர் நம்புவதாகவும்., அதற்காக அவருக்கு நானும் எனது பிள்ளைகளும் இணைந்து அவருக்கு வெண்கலத்தில் சிலை வைத்து வழிபட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருமங்கலம் பகுதியில் இறந்த தனது கணவருக்காக வெண்கலத்தில் மனைவி மற்றும் குடும்பத்தினர் சிலை வைத்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.