இட்லி தட்டு ஓட்டையில் மாட்டிக் கொண்ட குழந்தையின் பிஞ்சு விரல்; போராடி மீட்ட வீரர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் கைவிரல் இட்லி தட்டில் உள்ள ஓட்டையில் மாட்டிக் கொண்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் விரலை போராடி மீட்டனர்.
கன்னியாகுமரி லூர்துமாதா தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஆரோக்கிய சேவியஸ். இவருக்கு ஜாபி என்ற 4 வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தை இட்லி தட்டை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையின் கை விரல் இட்லி தட்டில் இருக்கும் துவாரத்தில் சிக்கிக் கொண்டது.
இதனால் பயத்தில் குழந்தை அழ ஆரம்பித்தது. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் குழந்தையின் விரலை இட்லி தட்டின் துவாரத்திலிருந்து மீட்க முடியவில்லை. இதனால் குழந்தையை கன்னியாகுமரி தீயணைப்பு அலுவலகத்திற்கு எடுத்துவந்து மீட்டு தருமாறு தீயணைப்புத்துறையினரிடம் உதவி கோரினர்.
மாவட்ட அலுவலரின் அனுமதியுடன் நாகர்கோவிலிலிருந்து அவசரகால மீட்பு ஊர்தி வரவழைக்கப்பட்டு கருவிகள் உதவியுடன் இட்லி தட்டு சிறிது சிறிதாக வெட்டி எடுக்கப்பட்டு குழந்தை பாதகாப்பாக மீட்கப்பட்டது. இதனால் குழந்தையின் பெற்றோர் தீயணைப்புத் துறையினருக்கும் அவசர கால மீட்பு போலீஸாருக்கும் நன்றிகளை தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.