Watch : குமரியில் பத்தரகாளி அம்மன் கோவில் பங்குனி திருவிழா! - 50க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பங்கேற்பு!

குமரி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படும் கோவில்களில் ஒன்றான மூவோட்டு கோணம் பத்ரகாளி அம்மன் கோவிலில் பங்குனி மாத தூக்கத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இத்திருவிழாவில் 60 - க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பங்கேற்றனர்.
 

First Published Apr 4, 2023, 1:57 PM IST | Last Updated Apr 4, 2023, 1:57 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழக - கேரளா எல்லை பகுதியான மூவோட்டுகோணம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில். இங்கு வருடந்தோறும் பங்குனி மாதம் தூக்கத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன் படி கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை இன்று மதியம் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிகழ்வில் குமரி மற்றும் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குழந்தை வரம் வேண்டி, வேண்டுதல் நிறைவேறிய 60 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அவர்களது பச்சிளம் குழந்தைகளுக்கு நேர்ச்சை நிறைவேற்றும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த தூக்க நேர்ச்சையின் போது தூக்க ரதத்தில் தூக்ககாரர்கள் பச்சிளம் குழந்தைகளை தூக்கவில்லில் அந்தரத்தில் தொங்கியபடி கோவிலை சுற்றி ஒரு முறை வலம் வந்து நேர்ச்சையை முடித்து வைக்கின்றனர்.இந்த நிகழ்வை காண குமரி மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.