9 மணிக்கு பதிலாக பகல் 2 மணிக்கு துவங்கிய சமுதாய வளையல் காப்பு; திமுகவினருக்காக காத்திருந்த கர்ப்பிணி மயக்கம்
கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சியில் காலை 9 மணிக்கு துவங்க வேண்டிய நிகழ்ச்சி இரண்டு மணிக்கு துவங்கியதால் கர்ப்பிணி பெண்கள் மயக்கம் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி.
தமிழக முழுவதும் திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு பகுதிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுற்றுலா தளமான கொடைக்கானலில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி காலை 9 மணிக்கு துவங்கும் என்று அனைத்து கர்ப்பிணிப் பெண்களையும் அழைத்து வந்து தனியார் விடுதியில் அமர வைத்து பகல் 2 மணிக்கு காலதாமதமாக துவங்கியது. நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினரும், திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் மகனான செந்தில்குமார் மற்றும் எம் பி வேலுச்சாமி ஆகியோர் தாமதமாக வந்து கலந்து கொண்டதால் கர்ப்பிணி பெண்கள் மயக்கமடைந்தனர்.
மயக்கமடைந்து கீழே விழுந்த கர்ப்பிணிப் பெண்ணை பார்ப்பதற்கு எந்த ஒரு அரசு அதிகாரியும், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் என யாரும் வரவில்லை என்று நிகழ்ச்சியில் உடன் இருந்த கருப்பிணிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அருகில் இருந்த பெண்கள் கூச்சலிட்டு அவரின் முகத்தில் தண்ணீரை தெளித்து கண் விழிக்க வைப்பதற்கு போராடிக் கொண்டிருந்த பொழுது சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், எம்பி வேலுச்சாமி ஆகியோர் இருக்கையில் அமர்ந்திருந்தது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நடைபெறும் சமூக வளைகாப்பு நிகழ்ச்சியில் உரிய நேரத்தில் அரசு அதிகாரிகள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும். அதேபோல் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.