Asianet News TamilAsianet News Tamil

மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு - அரசு ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை

ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் தொழில் முடக்கம் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல்லில் அரசு ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First Published Feb 16, 2024, 6:02 PM IST | Last Updated Feb 16, 2024, 6:02 PM IST

மத்திய, மாநில அரசுகளால் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு திட்ட பணிகளை கொண்டு செல்வது அரசு ஒப்பந்ததாரர்கள். சாலை வசதி அமைப்பது, குடிநீர் வசதி அமைப்பது, சிமெண்ட் சாலை, கழிவு நீர் வாய்க்கால், அரசு கட்டிடங்கள் என அனைத்தையும் அரசு ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக  ஒப்பந்த பணிக்கு அதிகம் பயன்படுத்தப்படும் எம்சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்கள் விலையேற்றம் கண்டுள்ளன. 

இதனால் ஒப்பந்ததாரர்கள் தங்களது ஒப்பந்த பணிகளை செய்ய முடியாமல் தற்போது நஷ்டத்தில் பணிகள் செய்து வருவதாகவும், இதனால் திண்டுக்கல் மாவட்ட அனைத்து அரசு ஒப்பந்ததாரர்கள் மாவட்டம் முழுவதும் ஒரு நாள் அரசு ஒப்பந்த திட்டப்பணிகளை செய்யாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் கிரஷர் உரிமையாளர்களை சந்தித்து கோரிக்கை மனுவையும் வழங்கி உள்ளனர்.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட கிரஷர் உரிமையாளர் மற்றும் அரசு மாவட்ட அனைத்து ஒப்பந்ததாரர்கள் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த பொழுது, தொடர்ந்து எம் சாண்ட் மற்றும் ஜல்லி கற்களை விலை ஏற்றம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மாவட்டத்தில் தேவையை கருத்தில் கொள்ளாமல் குறைவாக ஜல்லி, எம் சாண்ட் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்குவதால் மட்டுமே விலை ஏற்றம் ஏற்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிரசர் உரிமையாளர்களும் இணைந்து தமிழக அரசிடம் 14 கோரிக்கைகளை வைத்துள்ளோம். அதில் முக்கிய கோரிக்கை தமிழகத்தில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எம் சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்கள் எடுப்பதை அதிகரித்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

தற்போது திண்டுக்கல் மாவட்ட அரசு அனைத்து ஒப்பந்ததாரர் சங்கம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையை மாநில சங்கத்துடன் கலந்தாலோசித்து தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட அரசு அனைத்து ஒப்பந்ததாரர் சங்கத்தின் சார்பாக பேசிய வெள்ளைச்சாமி, தமிழக முழுவதும் அரசு திட்டங்களை முழுமையாகவும், விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து பயணித்து வருகிறோம். 

எங்களது வாழ்வாதாரம் முழுவதும் ஒப்பந்த பணிகளை செய்து வரும் சூழ்நிலையில் கடந்த ஒரு வருடமாக திட்ட பணிகளுக்கு தேவையான எம் சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக்கற்கள் உட்பட அனைத்து மூலப் பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஆகவே திட்ட பணிகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றால் மூலப் பொருட்கள் விலை குறைய வேண்டும். 

அதற்காக ஒப்பந்ததாரர்கள் அனைவரும் இணைந்து கிரசர் உரிமையாளர்களை சந்தித்து இன்று மனு ஒன்று வழங்கி உள்ளோம். மேலும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து மூலப் பொருள்களின் விலை உயர்வை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக எம்சாண்ட் பிசாண்ட் ஜல்லிக்கற்கள் விலை ஏற்றம் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு அமைச்சர்கள், தமிழக முதல்வரிடம் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைக்க உள்ளோம் என்றார்.

Video Top Stories