கபடி வீரரை கொன்று கல் குவாரியில் வீச்சு? அழுகிய நிலையில் சடலம் மீட்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் சிமெண்ட் தொழிற்சாலைக்கு சொந்தமான கல்குவாரியில் உடலில் கல்லை கட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடல் அழுகிய நிலையில் இருப்பதால் உயிரிழந்தவர் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை.
 

First Published Feb 10, 2023, 1:42 PM IST | Last Updated Feb 10, 2023, 1:42 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆலம்பாடி ஊராட்சி கொல்லப்பட்டி அருகே செட்டியூர் செல்லும் சாலையில்  குஜிலியம்பாறை அருகே செயல்பட்டு வரும் தனியார் சிமெண்ட் தொழிற்சலைக்கு சொந்தமான கல்குவாரியில் சடலம் ஒன்று இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினரும், குஜிலியம்பாறை தீயணைப்புத் துறையினரும் சென்று கல்குவாரியில் மிதந்துகொண்டிருந்த சடலத்தை மீட்டனர். 

சடலத்தை மீட்டதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர்  அடையாளம்  தெரியாத நபர் என்பதும் ஒரு வாரத்திற்கு மேலாக கல்லை கட்டி வீசி இருக்கக்கூடும் எனவும் தெரிய வந்தது. மேலும் அவர் அணிந்திருந்த ஆடையில் ராம் பாய்ஸ் கபடி குழு காங்கேயம் என்று எழுதப்பட்டுள்ளது. 

குஜிலியம்பாறை வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் ஆய்வு செய்ததில் இங்கு செயல்பட்டு வரும் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான ஆலம்பாடி, மல்லபுரம், கோட்டநத்தம், சேர்வைக்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன என்றும், இன்று இளைஞரை  கல்லை கட்டி கொலை செய்யப்பட்ட கல்குவாரியில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு இளம் பெண் உள்பட மூன்று பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவமும் தெரியவந்துள்ளது.

அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை உடல் கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Video Top Stories