Watch : கோவை துணை மின்நிலையத்தில் புகுந்த யானைக்கூட்டம்! அவசரமாக மின்சாரம் துண்டிப்பு!
கோவை மருதமலை துணை மின் நிலையத்திற்குள் காட்டு யானை கூட்டம் புகுந்ததையடுத்து, அவசர அவசரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கோவை, மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மருதமலை வனப்பகுதி அமைந்துள்ளது. யானைகள் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த வனப்பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.
தற்போது யானைகளின் வலசை காலம் தொடங்கியுள்ளதால் கேரள வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் தடாகம், மருதமலை வனப்பகுதிக்குள் வந்துள்ளன. இந்நிலையில் சம்பவத்தன்று மருதமலை வனப்பகுதியில் இருந்து 8 யானைகள் கூட்டம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி துணை மின்நிலையத்திற்குள் புகுந்தன அதில் 6 யானைகள் கோவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்தது, பின்னர் அங்கும் இங்கும் சுற்றிய யானைகள் திடீரென அருகே இருந்த துணை மின் நிலையத்தின் கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தன.
யானைகள் உள்ளே வருவதை கண்ட லைன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் கேங்மேன் மணிமாறன் ஆகியோர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் மின் இனைப்பை துண்டிக்குமாறு அறிவுறுத்தவே, உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர்.
மேலும் ஊழியர்கள் யானைகளை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காட்டு யானைகளை மருதமலை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.