ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கோவை விழா நிர்வாகிகள்; ஆனந்தத்தில் துள்ளி குதித்த குழந்தைகள்
கோவை விழாவை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளை கோவை விழா நிர்வாகிகள் டபுள் டக்கர் பேருந்தில் அழைத்துச் சென்று அவர்களை உற்சாகப்படுத்தினர்.
கோவை விழாவை முன்னிட்டு டபுள் டக்கர் பேருந்து சேவை மூன்று நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 8ம் தேதி வரை இந்தப் பேருந்தில் முன்பதிவு செய்து இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பேருந்துக்கு கோவை மக்களிடையே பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.
இப்பேருந்தில் கோவை மாநகருக்குள் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யலாம். தினமும் ஏறத்தாழ 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த பேருந்தில் பயணம் செய்வதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று ஆதரவற்ற 20 குழந்தைகளை கோவை விழா நிர்வாகிகள் டபுள் டக்கர் பேருந்தில் அழைத்துச் சென்றனர்.
இவர்கள் வ.உ.சி மைதானத்தில் இருந்து காந்திபுரம் வரை பயணம் செய்தனர். முதல் முறையாக டபுள் டக்கர் பேருந்தில் பயணம் குழந்தைகள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இவர்களுக்கு கோவை விழா நிர்வாகிகள் இனிப்பு வழங்கி மகிழ்வித்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.