Video : தீபாவளி காசு எங்கே? கோவையில் கடை முன்பு குப்பை கொட்டி அசுத்தம் செய்த தூய்மைப் பணியாளர்!
கோவை மாநகராட்சியில் கடை முன்பு குப்பையை கொட்டும் தூய்மை பணியாளர் ஒன்றின் சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோவை ஆர்.எஸ். புரம் ராமச்சந்திரா ரோட்டில் உள்ள தனியார் எல்.இ.டி கடை நடத்தி வருபவர் ஜேம்ஸ். இவரிடம், சுகாதார பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, ஜேம்ஸ் 20 ஆம் தேதிக்கு மேல் வாங்க தருகிறேன் என அந்த தூய்மை பணியாளரிடம் கூறியுள்ளார். ஆனால், அதன் பின்னரும், அந்த தூய்மை பணியாளர் தொடர்ந்து ரூ. 500 கேட்டு தொந்தரவு செய்யவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி சுகாதார பணியாளர் ஒருவர் கடை அருகே இருந்த குப்பையை எடுத்து,கடை முன்பு போடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இருப்பினும் அப்பகுதி, குப்பை தொட்டி இல்லாத வார்டாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் வீடு வீடாகச் சென்று, தரம் பிரித்து குப்பை சேகரிக்கின்றனர்.
மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள, ஒரு கடையில் இருந்து குப்பையை பிரித்துக் கொடுக்காமல் ரோட்டில் கொட்டி வந்திருக்கின்றனர். அதை கவனித்த துாய்மை பணியாளர், அதை அள்ளி, கடைக்கு முன் போட்டிருக்கிறார். இக்காட்சி, 'சிசி டிவி' கேமராவில் பதிவாகியயிருப்பதாகவும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்
கடைக்கு முன் குப்பையை கொட்டிய காரணத்துக்காக, சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை ஒதுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். விசாரணை பின்பே இதுகுறித்த உண்மை தகவலை அளிக்கமுடியும் என்று கோவை மாநகராட்சி தரப்பில் சொல்லப்படுகிறது