நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சப்பாத்தியில் கலைஞரின் ஓவியத்தை வரைந்து இளைஞர் அசத்தல்
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய கலைஞர் ஒருவர் கருணாநிதியின் புகைப்படத்தை சப்பாத்தியில் வரைந்து அசத்தியுள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு இடங்களில் அரசு சார்பிலும் திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த UMT ராஜா என்ற ஓவிய கலைஞர் சப்பாத்தியில் கலைஞர் கருணாநிதியின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார். ஒரு சிறிய அளவிலான இரும்பு கம்பியை நெருப்பில் காய்ச்சி அதன் மூலம் சப்பாத்தியில் கலைஞரின் ஓவியத்தை வரைந்துள்ளார். இதனை செய்வதற்கு சுமார் 3 மணி நேரமாகியதாக அவர் கூறியுள்ளார். அவர் வரைந்த ஓவியத்தில் கலைஞர் மு.கருணாநிதியின் முகமும், அதன் கீழ் "கலைஞர் 100" என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது.
இவர் இதற்கு முன்னதாகவே பல்வேறு மைக்ரோ ஆர்ட்டுகளை (Micro Art) தங்கத்தில் செய்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.