Watch : கோவையில் நட்-ஐ விழுங்கிய நபர்! அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக நீக்கிய மருத்துவர்கள்!

கோவையில் பணியின் போது நட்டை(nut) விழுங்கிய எலெக்ட்ரீசியன். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றினார் .
 

First Published Oct 21, 2022, 2:26 PM IST | Last Updated Oct 21, 2022, 2:26 PM IST

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சாம்சுதின் (வயது 55). எலெக்ட்ரீசியன். இவர் கடந்த 18-ந் தேதி நட்டை வாயில் வைத்துக்கொண்டு வேலை பார்த்துக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அந்த நட்டை விழுங்கினார். இதனால் அவருக்கு இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும் அவர் இதுகுறித்து அங்கு இருந்த சக தொழிலாளர்களிடம் தெரிவித்தார். உடனே அவரை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை மருத்துவர் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதித்து மார்பில் எக்ஸ்ரே பரிசோதனை செய்தனர். அதில் அவர் விழுங்கிய நட்டு இடது பக்க நுரையீரல் செல்லும் வழியில் மூச்சுக்குழாயில் சிக்கிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் டாக்டர் அலிசுல்தான் தலைமையில் மருத்துவர் சரவணன், மயக்கவியல் மருத்துவர் மணிமொழி, செல்வன், மதனகோபாலன் அடங்கிய மருத்துவ குழுவினர் இணைந்து சாம்சுதினுக்கு மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்து நட்டை வெற்றிகரமாக அகற்றினர். தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். மருத்துவ குழுவினரை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா வெகுவாக பாராட்டினார்.