10 வருடத்திற்கு பிறகு திறக்கப்பட்ட சாலை.. வாகன ஓட்டிகள் பெரும் மூச்சு..!வீடியோ
10 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா சாலை மீண்டும் இரு வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது, இன்று காலை 6 மணி முதல் சோதனை ஓட்டமாக அண்ணாசாலை மீண்டும் இரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை வழித்தடம் அமைப்பதற்கான பணி 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதனால் அண்ணாசாலை பகுதியில், மெட்ரோ ரெயில் சுரங்கம் அமைப்பதற்காக எல்.ஐ.சி.யில் இருந்து ஸ்பென்சர் வழியாக செல்லும் அண்ணாசாலை மூடப்பட்டது.
இதையடுத்து, இந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள், ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ, சத்யம் தியேட்டர் வழியாக அண்ணாசாலை சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் அண்ணா சாலை வழியாக செல்ல வேண்டியவர்கள் அதிக தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது. ராயப்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா மேம்பாலத்தில் இருந்து சிம்சன் நோக்கி செல்லும் எதிர்பாதை மட்டும் ஒரு வழிசாலையாக இயங்கி வந்தது.
இந்த நிலையில், அண்ணாசாலை, பகுதியில் மெட்ரோ சுரங்கம் அமைக்கும் பணி முடிந்து ரெயில்கள் இயங்கத் தொடங்கின. என்றாலும் சில இடங்களில் சாலை விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன.
தற்போது அந்த பணிகளும் முடிந்துவிட்டன. இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா சாலை மீண்டும் இரு வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது, இன்று காலை 6 மணி முதல் சோதனை ஓட்டமாக அண்ணாசாலை மீண்டும் இரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
அண்ணாசாலை இரு வழிச்சாலையாக மாற்றப்பட்டதற்கு பொது மக்களும் பயணிகளும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இனி அண்ணாசாலையில் இனி போக்கு வரத்து நெரிசல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.