சமாதியில் மேளதாளத்துடன் நடந்த திருமணம்.. திரண்ட அதிமுகவினர் வீடியோ..!
பவானி சங்கர்,"ஜெயலலிதாவே நேரில் வந்து ஆசி வழங்கியதைப் போல உணர்கிறேன்' என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமாக இருந்தவர் மறைந்த செல்வி ஜெயலலிதா. இவரது சமாதி சென்னை மெரினா கடற்கரையில் இருக்கிறது. இங்கு தற்போது நினைவிடத்திற்கான கட்டிட பணிகள் நடந்து வருவதால் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. முக்கிய பிரமுகர்கள் மட்டும் செல்ல அரசின் சார்பில் அனுமதி தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக வடசென்னை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராக இருப்பவர் பவானி சங்கர். இவர் தனது மகனின் திருமணத்தை ஜெயலலிதாவின் சமாதியில் நடத்த விருப்பப்பட்டார். இதற்காக முறையான அனுமதியை பெற்றிருந்தார்.
இதையடுத்து நேற்று காலை அவரது மகன் சாம்பசிவனிற்கும் தீபா என்கிற பெண்ணிற்கும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திருமணம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் மற்றும் மேள தாளங்கள் முழங்க மணமகன் தாலி கட்டினார்.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அனைத்துலக எம்ஜிஆர் மன்றத்தின் செயலாளர் தமிழ்மகன் உசேன், ஆறுமுகம் (எ) சின்னையா மற்றும் பல அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் அமரும் வகையில் சமாதியைச் சுற்றிலும் பந்தல் அமைக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
இதுகுறித்து கூறிய பவானி சங்கர்,"ஜெயலலிதாவே நேரில் வந்து ஆசி வழங்கியதைப் போல உணர்கிறேன்' என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார்.