பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ஒரு கோடி பணம் பறிமுதல்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடத்தையில் உள்ள நிலையில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணத்தை அதிகாரிகள் தொடர்ந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் இரண்டு வாகனங்களில் தனியார் நகைக்கடை, துணிக்கடைகளில் விற்பனையான பணத்தை எடுத்து சென்று வங்கிகளில் டெபாசிட் செய்வதற்காக எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பணத்தை பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ், தேர்தல் நடத்தும் துணை தாசில்தார் விஜய் ஆகியோர் பறிமுதல் செய்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் உரிய ஆவணங்கள் காண்பித்த பிறகு பணம் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ரூ.1 கோடி பரிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.