120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி 4 பேர் தற்கொலை மிரட்டல்..! பரபரப்பான பொன்னேரி..

பொன்னேரி அருகே தனியார் தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி நான்கு தொழிலாளர்கள் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு.

First Published Aug 19, 2019, 6:55 PM IST | Last Updated Aug 19, 2019, 6:56 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் பிஜிஆர் எனர்ஜி சிஸ்டம் என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு அனல் மின் நிலைய குளிர்சாதன உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு 127 தொழிலாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இன்று காலை தச்சூர் கூட்டுசாலையில் தொழிலாளர்கள் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அன்பழகன், ஹரி, மதன், கமல் ஆகிய நான்கு தொழிலாளர்கள் அருகில் உள்ள 120 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறினர். தொழிற்சாலை நிர்வாகம் உடனடியாக கதவடைப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் இல்லையென்றால் மேலேயிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்தனர். காவல்துறை அதிகாரிகளும் வருவாய்துறையினரும் நான்கு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி மீண்டும் அனைவரையும் பணியமர்த்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மூன்றரை மணி நேரமாக மேற்கொண்டு வந்த போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. செல்போன் டவரில் ஏறி தொழிலாளர்கள் விடுத்த தற்கொலை மிரட்டலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.