Watch : ஐப்பசி பௌர்ணமி நாளில் அன்னாபிஷேகம்! - கங்கைகொண்ட சோழபுரத்தில் குவிந்த பக்தர்கள்!

ஐப்பசி பௌர்ணமியையொட்டி அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பிரகதீஸ்வரரை வழிபட்டனர்.
 

First Published Nov 8, 2022, 1:30 PM IST | Last Updated Nov 8, 2022, 1:30 PM IST

அபிஷேகம் என்பது இறைவனுக்கு செய்யும் ஒரு செயல். இறைவனின் சிலைக்கு பால், தயிர், தேன், புனித நீர் உள்ளிட்ட அபிஷேகப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படும். அந்த வகையில் அன்ன அபிஷேகம் என்பது சமைக்கப்பட்ட அரிசியால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதாகும்.

பொதுவாக அன்னாபிஷேகம் தமிழ் மாதமான ஐப்பசி பௌர்ணமி நாளில் செய்யப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டாலும், தென்னிந்திய சிவன் கோவில்கள் அனைத்திலும் சிவலிங்கம் வடிவில் சிவபெருமானுக்கு இந்த குறிப்பிட்ட அபிஷேகம் செய்யப்படுகிறது.

இதனையொட்டி, அரியலுர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு 100 மூட்டைகளில் 2 ஆயிரத்து 500 கிலோ பச்ச அரிசியை பயன்படுத்தி சாதம் வடிக்கப்பட்டது. சுமார் 60 அடி சுற்றளவு மற்றும் 13.5 அடி உயரமும் கொண்ட சிவலிங்கத்திற்கு அரிசி சாதம் கொண்டு அபிஷேகம் செய்து அதைக் கொண்டே அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.