புயலால் பாதித்த மக்களுக்கு 6 ஆயிரமல்ல 15 ஆயிரம் வழங்க வேண்டும் - நயினார் நாகேந்திரன் கோரிக்கை
மிக்ஜாம் புயலால் பாதித்த மக்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரும், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2016 ம் ஆண்டுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகாலம் இந்தியவை ஆட்சி செய்தது. காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட போது தான் ஊழலில் மிகுந்த கட்சி என நிறுபிக்கப்பட்டது.
பாஜக 10 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து வருகிறது. இது மட்டுமல்லாமல் 15 ஆண்டுகளை நிறைவேற்றவும் உள்ளது. பாஜகவின் மீது இதுவரை ஒரு ஊழல் குற்றச்சாட்டு புகார் கூட வரவில்லை. காங்கிரஸ் கட்சி ஊழல் நிறைந்த கட்சி. பாஜக ஊழல் இல்லாத கட்சியாக உள்ளது. இந்தியா கூட்டணி ஊழல் நிறைந்த கூட்டணி. இந்திய மக்களின் நலன் சாராத கூட்டணி காங்கிர கூட்டணி. இனியும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டுமா என்பதை சிந்திக்க வேண்டும்.
பாஜக தமிழக சட்டமன்ற குழு மிக்ஜாம் புயலுக்கான வெள்ள நிவாரணத்திற்கு ஒரு மாத ஊதியத்தை வழங்க உள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு 6000 நிவாரணம் வழங்குவது போதாது. குறைந்தபட்சம் 15 ஆயிரமாக கொடுக்க வேண்டும். கீழ்பாக்கம் மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தையின் உடல் முறையாக, மரியாதையாக வழங்கியிருக்க வேண்டும்.
சுகாதாரத்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் சொல்லிய பதில் ஏற்றுகொள்ள முடியாது. பொறுப்பான, முறையான பதிலை தெரிவித்திருக்க வேண்டும். அதிமுகவுடன் பாஜக கூட்டணியா இல்லையா என்பதை பாஜக மேல் மட்டம் முடிவு செய்யும். பாஜக நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என தெரிவித்தார்.