Watch : புதுச்சேரியில் நிர்வாண வீடியோ ரெக்கார்ட் செய்து பணம் கேட்டு மிரட்டியதால் இளைஞர் தற்கொலை!!
புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் வீடியோ காலில் உடையின்றி (நிர்வாணமாக) பேசியதை மர்ம நபர் ரெக்கார்ட் செய்து மிரட்டி பணம் கேட்டதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த வில்லியனூர், ஆத்து வாய்க்கால் பேட், மாரியம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் கூலித் தொழிலாளி முருகேசன். இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். மேலும் 2 வது மகனான கண்ணன் டிரைவர் வேலை செய்து வருகிறார். இதேபோல் 3 வது மகனான சந்துரு (25) எலக்ட்ரிஷியன் வேலை செய்து வந்தார்.
இதனிடையே சந்துரு வேலை இல்லாத நேரத்தில் செல்போனை அதிகம் பயன்படுத்துவார் என கூறப்படுகிறது. மேலும் நேற்று அதிகாலை சந்துரு அவரது வீட்டின் அருகே உள்ள கொய்யா மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்துகொண்ட சந்துருவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்த போது அதில் இறப்பதற்கு முன்னதாக சந்துரு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் தன்னை முகநூல் மூலம் நண்பர் ஒருவர் வீடியோ கால் செய்து தான் ஆடையின்றி முழு நிர்வாணமாக இருந்த வீடியோவை ரெக்கார்ட் செய்து வைத்து தன்னை பணம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மேலும் அந்த நபரை விடக்கூடாது எனவும் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த முகநூல் நண்பர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனது நண்பரை போல யாரும் முகநூலில் வீடியோ கால் வந்தால் ஏமாற வேண்டாம் எனவும் உயிரிழந்த சந்துருவின் நண்பர் கேட்டுக் கொண்டுள்ளார்.