அசுர வேகத்தில் பேருந்தை முந்த முயன்ற வாலிபர்; திடீரென எதிரே வந்த காரால் நிகழ்ந்த பரிதாபம்
கேரளாவில் இருசக்கர வாகனத்தில் பேருந்தை முந்த முயன்ற வாலிபர் திடீரென எதிரே வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பத்தேரி - புல்லுப்பள்ளி சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றை பின்னால் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் முந்த முயன்றுள்ளார். இளைஞர் அந்தப் பேருந்தை முந்த முயலும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்து கொண்டிருந்த கார் ஒன்று பைக் மீது மோதி அந்த இளைஞர் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் அந்த இளைஞனுக்கு உடலில் பலத்த காயமும் ஏற்பட்டது. தலைக்கவசம் அணிந்திருந்ததால் பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்த மக்கள் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இது குறித்து பத்தேரி போலீசாரின் விசாரணையில் இளைஞர் கண்ணூர் மாவட்டத்தை சார்ந்த சுபின் என்பது தெரியவந்துள்ளது. மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பேருந்தின் பின்னால் இருந்த கேமராவில் அந்த விபத்தின் காட்சிகளும் பதிவாகியுள்ளது. அந்த பதற வைக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.