விஜயதசமியை முன்னிட்டு நெல்லில் பெயர் எழுதும் நிகழ்வு; திரளான குழந்தைகள் பங்கேற்பு
விஜயதசமியை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீலஷ்மி ஹயக்கிரீவர் கோயிலில் நெல்லில் பெயர் எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் திரளான பெற்றோர்கள் தங்கள் குழைந்தைகளுடன் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று குழந்தைகளுக்கு முதன் முறையாக கல்வி தொடங்கும் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று புதுச்சேரியில் பல்வேறு கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள ஶ்ரீ லஷ்மி ஹயக்கிரீவர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தது மட்டுமல்லாமல், தங்களின் குழந்தையின் கையை பிடித்து நெல்லில் பெயர் எழுதியும், “அ” எழுத்து எழுதியும் முதல் கல்வியை தொடங்கி வைத்தனர். குழந்தைகள் கல்வியில் நல்ல திறனை பெறவேண்டும் என்பதற்காக வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
மேலும் விஜயதசமியையொட்டி பல்வேறு தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.