Watch : கேரளாவில் அதிகரிக்கும் பன்றிக்காய்சல்! - பன்றிகளை அழிக்கும் பணிகள் தீவிரம்!

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைத் தொடர்ந்து இடுக்கி மாவட்டத்திலும் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டது.270 பன்றிகளை அழிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
 

First Published Nov 11, 2022, 9:45 PM IST | Last Updated Nov 11, 2022, 9:45 PM IST

கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு பன்றிப் பண்ணையில் இருந்த பன்றிகளுக்கு கடந்த வாரம் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இது மனிதர்களுக்கு பரவும் அபாயம் இருந்ததாலும், பக்கத்து மாவட்டங்களுக்கு பரவும் அபாயம் இருந்ததாலும் கேரள சுகாதாரத் துறையின் சார்பாக நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியிலும் இன்று பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் இடுக்கி மாவட்டம் கரிமன்னூர், இலவெட்டி, பாலக்கோடு ஆகிய பஞ்சாயத்துக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் சுமார் 270 பன்றிகளை அழிக்குமாறு இடுக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

மேலும் தமிழக கேரள எல்லையை ஒட்டிய மாவட்டமாக இடுக்கி மாவட்டம் உள்ளதால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் பரவாத வண்ணம், கேரளாவில் இருந்து தமிழகம் மற்றும் பிற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் கேரளா சுகாதார துறையின் சார்பாகவும், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாகவும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் 24 மணி நேரமும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கேரள அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.