மாட்டு வண்டிக்கு 1000 ரூபாய் ஃபைன் போட்ட போலீஸ்.. ரசீதுடன் ஸ்டேஷனுக்குள் புகுந்த நபர்..! பரபரப்பு வீடியோ..

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி மாட்டுவண்டிக்கு அபராதம் விதித்த சம்பவம் பெரும் ஆச்ரயத்தை ஏற்படுத்தியுள்ளது.

First Published Sep 16, 2019, 1:54 PM IST | Last Updated Sep 16, 2019, 1:54 PM IST

விபத்துக்களை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தின்படி சாலை விதிகளை மீறுவோரிடம் பல மடங்கு அதிக அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை  கடந்த 1ஆம் தேதி முதல் பல மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு மக்களிடம் கடும்  எதிர்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி மாட்டுவண்டிக்கு அபராதம் விதித்த சம்பவம் பெரும் ஆச்ரயத்தை ஏற்படுத்தியுள்ளது 

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள சார்பா கிராமத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் ஹாசன்  கடந்த சனிக்கிழமை இவர் தன்னுடைய  மாட்டு வண்டியை தனது வயலின் சாலை ஓரத்தில் நிறுத்தி உள்ளார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சாஹஸ்பூர் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் பங்கஜ் குமார் தலைமையிலான காவலர்கள் மாட்டு வண்டியைப் பார்த்ததும் தங்கள் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட பின்  ரியாஸ் ஹாசன் வீட்டுக்கு மாட்டு வண்டியை ஓட்டிச் சென்று ஆயிரம் அபராத தொகை விதித்து அதற்கான ரசீதை ஒப்படைத்தனர்.

ஆனால்,  மோட்டார் வாகன சட்டத்தில் மாட்டுவண்டி இடம்பெறாத  நிலையில் ஏன் அபராதம் விதித்தார்கள் என குழப்பம் அடைந்த ரியாஸ், சாஹஸ்பூர் காவல் நிலையம் சென்று விவரம்கேட்டறிந்த பின், அபராத ரசீதை திரும்ப பெற்றனர். பின்னர் இது குறித்து  காவல் நிலைய அதிகாரி தெரிவிக்கும் போது,

"சட்டவிரோதமாக சுரங்கங்களில் இருந்து மணலை மாட்டு வண்டிகளில் கொண்டு செல்வதாக தகவல் வந்தது... அதன் அடிப்படையில் சென்று காவலர்கள் சோதனை செய்தனர்... ரியாஸின் வாகனமும் அதற்கு பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சோதனை செய்து அபராதம்  விதித்துள்ளனர். மேலும்  இருள் சூழ்ந்த நேரம் என்பதால்  பில் புக் மாறி உள்ளது" என  தெரிவித்து  உள்ளனர். இந்த  சம்பவத்தால்  அப்பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பு  நிலவியது.