Watch : துங்கபத்ரா நீர்த்தேக்கம் திறப்பு! - வெள்ளத்தில் மூழ்கிய ஹம்பி நினைவு சின்னங்கள்!!
கர்நாடக மாநிலம், ஹோஸ்பேட்டையில் உள்ள துங்கபத்ரா நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பியுள்ளதால், ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் உலகப் புகழ்பெற்ற ஹம்பி நினைவுச் சின்னங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
ஹம்பி புரந்தர மண்டபம், விஜயநகர காலப் பாலம், ராம லக்ஷ்மணர் கோயில், சக்ரதீர்த்த சன்னகட்டா ஆகியவை துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளன. நீர்த்தேக்கத்தின் மொத்தமுள்ள 33 கதவணைகளில், 28 கதவணைகளில் இருந்து ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. 105.788 டிஎம்சி அடி நீர் சேமிப்பு கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம் ஏற்கனவே முழுமையாக நிரம்பியுள்ளது. ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து உள்ளது. எந்த நேரத்திலும் ஆற்றில் ஒன்றரை லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நீர்த்தேக்க மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை
துங்கபத்ரா நீர்த்தேக்கத்தில் இருந்து ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்படுவதால், கம்பளி-கங்காவதி பாலம் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புக்காசாகர்-கடேபாகிலு புதிய பாலம் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஹம்பியில் உள்ள துங்கபத்ரா ஆற்றங்கரையோர நினைவுச் சின்னங்கள் அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துங்கபத்ரா நீர்த்தேக்கத்தில் இருந்து ஆற்றில் உபரிஅதிகஅளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.