உம்மன் சாண்டியின் உடல் இன்று இரவு 7.30 மணிக்கு நல்லடக்கம்!

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடல் இன்று இரவு 7.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

First Published Jul 20, 2023, 3:39 PM IST | Last Updated Jul 20, 2023, 3:39 PM IST

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் பெங்களூருவில் கடந்த 18ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 79. பெங்களூரு இந்திரா நகரில் உள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் டி.ஜான் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல் கேரளா கொண்டு வரப்பட்டது.

திருவனந்தபுரத்தில் உள்ள உம்மன் சாண்டியின் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்ட உம்மன் சாண்டியின் உடல், தலைமைச் செயலகத்தில் உள்ள தர்பார் ஹாலில் செயின்ட் ஜார்ஜ் ஆர்த்தடாக்ஸ் கதீட்ரல், திருவனந்தபுரத்தில் உள்ள அம்மாநில காங்கிரஸ் தலைமையகம் ஆகியவற்றில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதன்பின்னர், திருவனந்தபுரத்தில் இருந்து உம்மன் சாண்டியின் சொந்த ஊரான கோட்டயத்துக்கு அவரது இறுதி ஊர்வலம் நேற்று புறப்பட்டது. சுமார் 28 மணி நேர பயணத்துக்கு பின்னர், கோட்டயத்தில் இருக்கும் திருநாக்கரா என்ற இடத்தை வந்தடைந்தது. திருநாக்கரா மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் 2 மணி நேரம் வைக்கப்பட்டது. தொடர்ந்து, இறுதி சடங்கு நடைபெறும் இடத்துக்கு ஊர்வலமாக அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது. ஆங்காங்கே பொதுமக்கள் உம்மன் சாண்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உம்மன் சாண்டியின் இறுதிச்சடங்கு புதுப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. முன்னதாக, இன்று பிற்பகலில் இறுதி சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உம்மன் சாண்டியின் கடைசி விருப்பப்படி, அவரது உடல் அரசு மரியாதை இல்லாமல் சாதாரணமாக நல்லடக்கம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories