இமாச்சலப் பிரதேசம் நிலச்சரிவு: சில்லாய் - சிம்லா சாலை மூடல்!
இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் சில்லாய் - சிம்லா சாலை மூடப்பட்டுள்ளது
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக, இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்ததில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பாலங்கள் சிதைந்துள்ளன. வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. பியாஸ் மற்றும் பர்பதி ஆற்றில் கார்கள், லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் அடித்து செல்லப்படும் காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள ரோன்ஹாட் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், சில்லாய் - சிம்லா சாலை மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவு, மேக வெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக 100க்கும் மேற்பட்டவரக்ள் உயிரிழந்துள்ளனர். தொடர் கனமழைக்கு இடையே மீட்பு பணிகளையும் அம்மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது. தேசியப் பேரிடர் மீட்பு படையினர் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.