ஆத்தாடி எவ்ளோ பெருசு... அயோத்தி ராமர் கோவிலுக்கு 108 அடி நீள ஊதுபத்தியை காணிக்கையாக வழங்கிய பக்தர்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்காக குஜராத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் 108 அடி நீள ஊதுபத்தியை காணிக்கையாக வழங்கி இருக்கிறாராம்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் வருகிற ஜனவரி 22ந் தேதி, ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவிற்காக நாடே தயாராகி வருகிறது. கும்பாபிஷேக விழா நேற்று முதல் தொடங்கி 7 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெற உள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோயிலில் 108 அடி உயரத்தில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஊதுபத்தி ஏற்றப்பட்டது. இந்த 108 அடி நீள ஊதுபத்தியை குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த விஹா பர்வத் என்ற பக்தர் காணிக்கையாக வழங்கினாராம். 108 அடி நீளமும், 3.5 அடி அகலமும் கொண்ட இந்த ஊதுபத்தி சுமார் 3 ஆயிரத்து 610 கிலோ எடை கொண்டதாகும். இந்த ஊதுபத்தி முழுக்க முழுக்க இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.