தேசிய விருது இயக்குனரை அசிங்கப்படுத்திய விஜய் பட நடிகர்.. பரபரப்பு வீடியோ..!
தன்னை ஒரு மூன்றாம் தர நடிகர் என்று மட்டம் தட்டி மேடையில் ஏறவிடாமல் தடுத்த தேசிய விருதுபெற்ற இயக்குநரை பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் மலையாள நடிகர் ஒருவர்.
பிரபல மலையாள நடிகர் பினீஷ் பாஸ்டின். இவர் ’ஆக்ஷன் ஹீரோ பைஜூ’ ’டபுள் பேரல்’’குட்டமாக்கான்’’கொலுமிட்டாயி’ உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் விஜய்யின் தெறி படத்திலும் நடித்துள்ளார்.பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 31-ஆம் தேதி நடந்த விழாவுக்கு இவரை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தனர். இந்த விழாவுக்கு மலையாள இயக்குநர் அனில் ராதாகிருஷ்ண மேனனும் அழைக்கப்பட்டிருந்தார். இவர் ’நார்த் 24 காதம்’ என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கியவர்.
மாலை 6 மணிக்கு விழா தொடங்க இருந்தது. அதற்கு முன்னாக பினேஷின் ஓட்டல் அறைக்குச் சென்ற மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்ட மாணவர்கள் சிறிது நேரம் தாமதமாக நீங்கள் கிளம்பி வாருங்கள் என்று தெரிவித்தனர். ஏன் என்று விசாரித்தார் பினேஷ். அப்போது மற்றொரு சிறப்பு அழைப்பாளராக, இயக்குநர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் வந்திருக்கிறார், அவர் உங்களுடன் ஒரே மேடையில் அமர மறுக்கிறார். அதனால் அவர் சென்ற பின் நீங்கள் வாருங்கள்’என்று தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பினேஷ், அவர்கள் சொன்னதை ஏற்காமல் குறிப்பிட்ட நேரத்தில் மேடைக்குப் புறப்பட்டார். அப்போது மேடையில் இயக்குநர் அனில் பேசிக்கொண்டிருந்தார். அதனால் போக வேண்டாம் என்று கல்லூரி பேராசிரியர் ஒருவர் அவரைத் தடுத்தார். அதோடு, மேடைக்குச் சென்றால் போலீசை அழைப்பேன் என்றும் எச்சரித்து கையைப் பிடித்து இழுத்தார். ஆனால் அதைக் கேட்காமல் மேடைக்குச் சென்ற பினேஷ், அங்கு போடப்பட்டிருந்த சேர்களுக்கு எதிரே தரையில் அமர்ந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அந்த இடத்திலேயே பேட்டி அளித்த பினேஷ் ,’ நான் கட்டிடத் தொழிலாளியாக இருந்து நடிகன் ஆனவன். மூன்றாம் தர நடிகர் என்றும் தனது படத்தில் நடிக்க வாய்ப்புக் கேட்டு அலைந்தேன் என்றும் அவர் மட்டம் தட்டிப்பேசியிருக்கிறார். என் பெயருக்குப் பின்னால் மேனன் இல்லை. நான் தேசிய விருது எதுவும் வாங்கவில்லை. ஆனால் நானும் மனிதன் தான். அவர் சொன்னதைக் கேட்டி இதயம் கொதித்ததால் நான் மேடையில் தரையில் அமர்ந்து என் எதிர்ப்பைப் பதிவு செய்தேன்’என்று குமுறினார்.
பினேஷின் பேட்டி வலைதளங்களில் வைரலானதும் கேரள திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அனில் ராதாகிருஷ்ண மேனனைக் கிழித்துத் தொங்கவிட்டனர். ‘இது புதுமாதிரியான தீண்டாமையாக இருக்கிறதே’என்று அவரை விமரிசித்தனர். அந்த எதிர்ப்புகளுக்குப் பணிந்த மேனன் நடந்த சம்பவத்துக்காக பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டார்.