எரிகிற விளக்கில் எண்ணெயை ஊற்றிய யுவராஜ் சிங்

எரிகிற விளக்கில் எண்ணெயை ஊற்றிய யுவராஜ் சிங்

உலக கோப்பை தோல்வியை அடுத்து, ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. அதை உறுதி செய்யும் விதமாக, ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்சி பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் பிசிசிஐ கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. 

ஆனால் விராட் கோலி தான் மூன்று விதமான போட்டிகளுக்குமான இந்திய அணியின் கேப்டனாக தொடர்ந்துவருகிறார். ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் துணை கேப்டனாக வழக்கம்போல ரோஹித் சர்மா தொடர்ந்துவருகிறார். இளம் வீரர்களுக்கு வழிகாட்டி அவர்களை வளர்த்தெடுக்கும் பொறுப்பை கேப்டன் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் சேர்ந்து ரோஹித் சர்மாவிற்கு கொடுத்துள்ளனர்.

துணை கேப்டனாக ரோஹித் சர்மாவை பெற்றிருப்பது கேப்டன் விராட் கோலிக்கு மிகப்பெரிய பலம். ரோஹித் சர்மா சிறந்த கேப்டன்சி திறன்களை கொண்டவர். போட்டியின் போக்கை சரியாக கணிக்கக்கூடியவர் என்பதால், இக்கட்டான சூழல்களில் விராட் கோலிக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கிவருகிறார். ரோஹித் சர்மா அணியில் இருப்பதால்தான் கோலி நல்ல கேப்டனாக திகழ்கிறார் என்று கம்பீர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ரோஹித் சர்மா ஐபிஎல்லில் 4 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து தனது கேப்டன்சி திறனை நிரூபித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கோலி ஆடாத போது கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்த கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாக பயன்படுத்தி இந்திய அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்திருக்கிறார். 

விராட் கோலி மூன்றுவிதமான அணிகளுக்கும் கேப்டனாக இருப்பதால், ஒரு வீரராகவும் கேப்டனாகவும் அவர் மீது அதிகமான அழுத்தம் இருக்கிறது. எனவே கோலியின் அழுத்தத்தை குறைக்கும் வகையில், கேப்டன்சி பொறுப்பை பிரித்து கொடுக்கலாமா என்று ஒரு பேட்டியில் யுவராஜ் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த யுவராஜ் சிங், முன்பெல்லாம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் மட்டும்தான். இப்போது மூன்றுவிதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. கேப்டனாக இருந்து மூன்றுவிதமான அணிகளையும் வழிநடத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. விராட் கோலிக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். எனவே டி20 அணிக்கு வேற கேப்டனை நியமிக்கலாம். ரோஹித் சர்மா வெற்றிகரமான கேப்டனாகத்தான் திகழ்கிறார். அவரையே கூட டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கலாம். விராட் கோலி எந்தளவிற்கு வேலைப்பளுவை சமாளிக்க முடியும் என்பதை அறிந்து அதற்கேற்ப அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். அவரது வேலைப்பளுவை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அணி நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என்ற கருத்து நிலவிவரும் நிலையில், யுவராஜ் சிங்கும், அதை செய்யலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

READ SOURCE