பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இலங்கை

பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இலங்கை

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி வென்ற நிலையில், டி20 தொடர் நடந்துவருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. 

லாகூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குணதிலகா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகிய இருவரும் சோபிக்கவில்லை. ஆனால் மூன்றாம் வரிசையில் இறங்கிய ராஜபக்சா அதிரடியாக ஆடி 77 ரன்களை குவித்தார். 48 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ஷெஹான் ஜெயசூரியா தன் பங்கிற்கு 34 ரன்களை சேர்த்தார். 

ஷனாகா 27 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்தது. 183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் 3 ரன்களிலும் ஃபகார் ஜமான் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அஹ்மத் ஷேஷாத் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் கோல்டன் டக்கான உமர் அக்மல், இந்த போட்டியிலும் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். 

கேப்டன் சர்ஃபராஸ் அகமது 26 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆசிஃப் அலி 29 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கையளித்த இமாத் வாசிம் 29 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் அடித்து 16வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் அவுட்டானதுமே பாகிஸ்தான் அணி தோற்பது உறுதியாகிவிட்டது. இமாத் வாசிம் அதிரடியாக ஆட தொடங்கியதும் பாகிஸ்தான் அணி நம்பிக்கை பெற்றது. ஆனால் அவர் அவுட்டானதும் அடுத்தடுத்து எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி, 19 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இலங்கை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின்மூலம் 2-0 என இலங்கை அணி டி20 தொடரை வென்றுவிட்டது. கடைசி போட்டி மட்டும் எஞ்சியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சொந்த மண்ணில் கிரிக்கெட் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு இது மிகப்பெரிய அடி. 
 

READ SOURCE