மிகப்பெரிய தலைக்கு வலைவிரிக்கும் இங்கிலாந்து அணி

மிகப்பெரிய தலைக்கு வலைவிரிக்கும் இங்கிலாந்து அணி

ட்ரெவெர் பேலிஸின் பயிற்சிக்காலத்தில் இங்கிலாந்து அணி சிறந்து விளங்கியுள்ளது. உலக கோப்பையை முதன்முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது இங்கிலாந்து அணி. அதைத்தொடர்ந்து ஆஷஸ் தொடரையும் இழந்துவிடாமல் 2-2 என சமன் செய்தது. ட்ரெவெர் பேலிஸின் பயிற்சிக்காலத்தில் இங்கிலாந்து அணி பல உச்சங்களை எட்டியது. 

இந்நிலையில், அவரது பதவிக்காலம் முடிந்த நிலையில், அவர் விட்ட இடத்திலிருந்து அப்படியே தொடர்ந்து மேலும் சாதனைகளை குவிக்கக்கூடிய அளவிற்கு, அணியை வழிநடத்தி செல்லும் ஒரு பயிற்சியாளரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தேடுகிறது. 

அந்தவகையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பரிசீலனையில் இருப்பதில் முதன்மையானவர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கேரி கிறிஸ்டன். பயிற்சியாளர் கெரியரில் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக கிறிஸ்டன் திகழ்ந்திருக்கிறார். கிறிஸ்டனின் பயிற்சியின் கீழ்தான் இந்திய அணி 2011ல் தோனியின் தலைமையில் உலக கோப்பையை வென்றது. அவரது பயிற்சிக்காலத்தில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நம்பர் 1 இடத்தை பிடித்தது.

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், தோனி, சேவாக், லட்சுமணன் போன்ற ஜாம்பவான்கள் கிறிஸ்டனின் பயிற்சியின் கீழ் ஆடியுள்ளனர். அதன்பின்னர் தனது சொந்த நாடான தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்த கிறிஸ்டன், அந்த காலக்கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியையும் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு அழைத்து சென்றார். ஸ்மித், டிவில்லியர்ஸ், ஜாக் காலிஸ் போன்ற ஜாம்பவான்களும் கிறிஸ்டனின் பயிற்சியில் ஆடியுள்ளனர். 

இவ்வாறு வெற்றிகரமான பயிற்சியாளராக திகழ்ந்துள்ள கிறிஸ்டன், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், க்ரீம் ஸ்மித், ஜாக் காலிஸ், டிவில்லியர்ஸ், தோனி ஆகிய சிறந்த வீரர்களுக்கு பயிற்சியளித்துள்ளார் என்பது அவருக்கு கூடுதல் பெருமை. 

அதனால் கிறிஸ்டனைத்தான் முதல் தேர்வாக வைத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ஆனால் கிறிஸ்டன், இங்கிலாந்து ஒருநாள் அணிக்கு மட்டும் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒருநாள் அணிக்கு தனி பயிற்சியாளரும் மற்ற ஃபார்மட்டுக்கு தனி பயிற்சியாளரும் நியமிப்பது, அணிக்குள்ளும் அவர்களுக்குள்ளும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதாலும், இந்த மாதிரி தனித்தனி பயிற்சியாளர்களை நியமித்து ஏற்கனவே அதனால் ஏற்பட்ட பிரச்னைகளை இங்கிலாந்து அணி எதிர்கொண்டிருப்பதாலும், அவ்வாறு செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. அதனால் மூன்றுவிதமான அணிகளுக்கும் கேரி கிறிஸ்டனை பயிற்சியாளராக நியமிக்கும் முனைப்பில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உள்ளது. 

அதற்கு கிறிஸ்டன் ஒப்புக்கொள்ளும்பட்சத்தில், அவர்தான் இங்கிலாந்து அணியின் அடுத்த பயிற்சியாளர். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கிறிஸ்டனை நியமிப்பதற்கு ஆர்வமாக உள்ளதால், அவர் நியமிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 
 

READ SOURCE