சாதனை படைக்க சாஹலுக்கு காத்திருக்கும் சவால்

சாதனை படைக்க சாஹலுக்கு காத்திருக்கும் சவால்

இந்தியா - வங்கதேசம் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நாளை டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடக்கவுள்ளது. 

வங்கதேசத்துக்கு எதிரான இந்த தொடரில் ஒரு மைல்கல்லை எட்ட சாஹல் காத்திருக்கிறார். ஆனால் அந்த சாதனையை இந்த தொடரில் படைக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் தெரியவில்லை. 

கோலி தலைமையிலான இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னர்களாக இருந்த குல்தீப்-சாஹல் ஜோடி அண்மைக்காலமாக ஓரங்கட்டப்படுகிறது. குல்தீப்-சாஹல் உலக கோப்பையில் அசத்துவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஏமாற்றமளித்தனர். இதையடுத்து உலக கோப்பைக்கு பின்னர் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை. 

அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்கவிருப்பதால், அதற்கான தயாரிப்பில் இருக்கும் இந்திய அணி, பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும் விதமாக பேட்டிங் தெரிந்த ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருவதால், வாஷிங்டன் சுந்தர், க்ருணல் பாண்டியா, ஜடேஜா ஆகியோரே டி20 அணியில் இடம்பிடிக்கின்றனர். சாஹலும் குல்தீப்பும் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர். 

எனினும் வங்கதேசத்துக்கு எதிரான டி20 அணியில் சாஹலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் ஆடும் லெவனில் இடம் கிடக்குமா என்பது சந்தேகம் தான். ஏனெனில் ஜடேஜா, க்ருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகிய பேட்டிங் ஆட தெரிந்த ஸ்பின்னர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், சாஹல் ஒரு மைல்கல்லை எட்ட காத்துக்கொண்டிருக்கிறார். சாஹல் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 46 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இன்னும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய பவுலர் என்ற மைல்கல்லை எட்டிவிடுவார். இதுவரை அஷ்வின் மற்றும் பும்ரா ஆகிய இரு இந்திய பவுலர்கள் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாஹல் இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் ஆடினால்தான் இந்த மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளது. அல்லது இரண்டு போட்டிகளிலாவது ஆடியாக வேண்டும். ஒரு போட்டியில் மட்டும் ஆடினால் அதில் 4 விக்கெட்டுகளை வீழ்த்துவது சாத்தியமல்ல. எனவே இந்த தொடரில் சாஹல் இந்த மைல்கல்லை எட்டுகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
 

READ SOURCE