உலகிலேயே மிக விலை உயர்ந்த காரை, பாகனி ஸோன்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஸோன்டா ஹெச்பி பார்சட்டா (Zonda HP Barchetta) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த காரின் தொடக்க விலை ரூ.211 கோடியாகும். கேட்டாலே தலை சுத்துதா, வாங்க மற்ற விவரங்கள் பற்றியும் பார்க்கலாம். இத்தாலியை சேர்ந்த பாகனி என்ற தொழிலதிபர் இந்த நிறுவனத்தை, கடந்த 1999ம் ஆண்டு தொடங்கினார். உயர் ரக சொகுசு, ஆடம்பர கார்கள், பந்தய கார்களை தயாரிப்பது மட்டுமே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். 

இதன்படி, பல்வேறு ஆடம்பர கார்களை தயாரித்து, சர்வதேச சந்தையில் தனி இடம்பிடித்த இந்நிறுவனம், கடந்த 2017ம் ஆண்டு தனது தயாரிப்பை நிறுத்துவதாக அறிவித்தது. அதன் கடைசி தயாரிப்புக்கு, ஹெச்பி பார்செட்டா எனப் பெயரிடப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அந்த புதிய காரை தற்போது லண்டனில் பாகனி ஸோன்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. லண்டனில் உள்ள குட்வுட் பகுதியில் செயல்படும் பாகனி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 25வது ஆண்டு கொண்டாட்ட விழாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. 

இது மட்டுமின்றி, பாகனி நிறுவனம் தயாரித்த பல ஆடம்பர கார்கள் அடங்கிய சிறப்பு பேரணி ஒன்றும் நடத்தப்பட்டது. அதில், ஹெச்பி பார்செட்டா கார் பார்ப்பவர்களை ஈர்ப்பதாக அமைந்தது. இந்த காரில் இன்னும் 2 மாடல்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தனது கடைசி தயாரிப்பான இதற்கு, அதிக முக்கியத்துவம் தந்து மெருகூட்டி வருவதாக, பாகனி ஸோன்டா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள காரை, பாகனியின் உரிமையாளரே வாங்கியுள்ளார். அவரது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக, கார் விற்கப்பட்டுள்ளது. இதுபோல, அடுத்த 2 மாடல்களும் முன்கூட்டியே புக்கிங் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய கார்கள் முன்பதிவின் அடிப்படையில்தான் தயாரிக்கப்படும். அதேசமயம், ஹெச்பி பார்செட்டா கார், ஏற்கனவே பாகனி தயாரித்த ஹயுரா கூப் காரின் மேம்பட்ட தயாரிப்புதான் என்று விமர்சிக்கப்படுகிறது. 

ஹெச்பி பார்செட்டா காரின் சிறப்பம்சங்கள்: 

லிட்டருக்கு 1.86 கி.மீ., இயங்குதிறன். எந்தவித ஏற்றத்தையும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற முடியும். இதில் ஏஎம்ஜி வி12 ரக என்ஜீன் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக, 789 பிஹெச்பி இயங்குதிறனை பெற முடியும். இது மிக அசாதாரண வேகமாக இருக்கும். சுமார் 338 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.