ஃபேஸ்புக் ஃப்ராடுகளை அம்பலப்படுத்திய ஒத்த லேடி... ஆடிப்போய் பெயரையே மாற்றிய மார்க் ஜூக்கர்பர்க்..!
ஃபேஸ்புக் தனது தாய் நிறுவனத்தின் பெயரை "மெட்டா" என்று மாற்றியதன் பின்னணியில் பல்வேறு அதிரடி விவகாரங்கள் அடங்கி இருக்கின்றன.
ஃபேஸ்புக் தனது தாய் நிறுவனத்தின் பெயரை "மெட்டா" என்று மாற்றியதன் பின்னணியில் பல்வேறு அதிரடி விவகாரங்கள் அடங்கி இருக்கின்றன.
மோசமான நெருக்கடிகளில் இருந்து தற்காத்துக் கொள்ளப் போராடி வரும் நிலையில் "மெட்டாவர்ஸ்" என பெயரிட்டு தன்னை புதுப்பிக்கப்பார்க்கிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் என உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் செயலிகளின் பெயர்களை மறுபெயரிடுதலால் விமர்சகர்கள் தளத்தின் செயலிழப்பிலிருந்து திசைதிருப்பும் முயற்சி இது என விமர்சிக்கப்படுகிறது.
"சமூகப் பிரச்சினைகளுடன் போராடி, மூடிய தளங்களில் வாழ்வதில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம், இப்போது நாங்கள் கற்றுக்கொண்ட அனைத்தையும் எடுத்து அடுத்த அத்தியாயத்தை உருவாக்க உதவுவதற்கான நேரம் இது" என்று வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டின் போது தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்.
"இன்று தொடங்கி, எங்கள் நிறுவனம் இப்போது மெட்டா என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். எங்களின் நோக்கம் அப்படியே உள்ளது. இன்னும் மக்களை ஒன்றிணைப்பது, எங்கள் பயன்பாடுகள் மற்றும் அவர்களின் பிராண்டுகள் மாறவில்லை," என்று அவர் கூறினார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனமே மறுபெயரிடுதலுக்கு தூண்டியுள்ளது. பெயர் மாற்றத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர், முக்கிய காரணகர்த்தா அந்நிறுவனத்தில் பணியாற்றி, அங்கிருந்து விலகிய முன்னாள் ஊழியர் ஃபிரான்சிஸ் ஹவ்ஜென். ஃபேஸ்புக் நிறுவனத்தில் இருந்து விலகி அந்நிறுவனத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி, மோசடிகளை அம்பலப்படுத்தினார். அங்கு தான் ஆரம்பித்தது ஃபேஸ்புக் மீதான அதன் பயனாளர்களின் நம்பிக்கை சரிவு.
சமூக நலன், பயனாளிகள் நலனைவிட வர்த்தக லாபத்தையே ஃபேஸ்புக் முதன்மையாகக் கருதுகிறது என ஃபிரான்சிஸ் ஹவ்ஜென் புட்டுப்புட்டு வைத்தார். இணைய உலகில் ஃபேஸ்புக்கின் செல்வாக்கை மனதில்கொண்டு பார்க்கும்போது இந்தக் குற்றச்சாட்டு உண்மை என பயனாளர்கள் உணரத் தொடங்கினர். இதற்கான ஆதாரங்களையும், தொடர்புடைய தகவல்களையும் அவர் பத்திரிகை மூலம் வெளியிட்டு, ஒட்டுமொத்த இணைய உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
2018-ம் ஆண்டு நடந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரத்தில் அந்த தகவல்களை விளம்பர நோக்கில் பரப்பியது ஃபேஸ்புக். இதனால் பயனாளிகளின் தனியுரிமை கேள்விக்குள்ளானது. 2016 அமெரிக்கத் தேர்தலில் வாக்காளர்களைக் குறிவைத்துப் பிரச்சாரம் செய்ய ஃபேஸ்புக் பயன்பட்டதாகவும், இந்தப் பிரச்சாரத்தில் பொய்ச் செய்திகள் முக்கியப் பங்கு வகித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
2021 அமெரிக்கத் தேர்தல் முடிவை ஏற்காமல் அப்போதைய அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் கேபிட்டல் பகுதியில் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைக்கும் ஃபேஸ்புக் பயன்படுத்தப்பட்ட விதம் கண்டனத்துக்கு உள்ளானது.
மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் வன்முறையை தூண்டும் கருத்துகளையும் பொய்ச் செய்திகளையும் பகிர்ந்துகொள்ளும் தளமாக ஃபேஸ்புக் இயங்குவது தெரியவந்தது. இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் ஃபேஸ்புக் தனது பொதுப்பக்கத்தில் தோன்றும் கருத்துகளை நெறிப்படுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்தப் பின்னணியில்தான் ஃபேஸ்புக் மீதான புதிய குற்றச்சாட்டுகள் வெளியாகத் தொடங்கின.
அமெரிக்காவின் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ நாளிதழில் இவை முதலில் வெளியாகத் தொடங்கின. ஃபேஸ்புக்கின் துணைச் சேவையான இன்ஸ்டாகிராம், இளம் பெண்களின் ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்கிறது என்பதை நன்கு அறிந்திருந்தும் ஃபேஸ்புக் அது தொடர்பாக மாற்று நடவடிக்கைகள் எடுக்காமல், பாதிப்பு ஏற்படுத்தும் உத்திகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது என்பது இந்தக் குற்றச்சாட்டின் மையம்.
இந்த நிலையில்தான் ஃபேஸ்புக்கின் முன்னாள் அதிகாரியான பிரான்சிஸ் ஹாகன், மீடியாக்களுக்கு பேட்டியளித்து அந்த நிறுவனத்தை பற்றி பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்து கொண்டார். ’’ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடுகளால் வெறுத்துப்போய், அதிலிருந்து விலகினேன். ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறும் முன், அதன் மோசமான செயல்பாடுகளை உணர்த்தும் ஆதாரங்களை கவனமாகத் திரட்டிக்கொண்டேன்’’ எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றத் துணைக் குழுவின் முன் அவர் ஆஜராகி, ஃபேஸ்புக்கின் மோசமான செயல்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளித்தார். இதே போல பிரிட்டனில் நடைபெறும் விசாரணையிலும் சாட்சியம் அளித்திருக்கிறார். ஃபேஸ்புக்கின் தீய விளைவுகளைத் துணிந்து அம்பலப்படுத்தியதற்காக அமெரிக்காவின் ‘நவீன நாயகி’ என்றும் ஹாகன் பாராட்டப்படுகிறார்.
இதனிடையே இந்தியாவிலும் துவேஷம், வன்முறை சார்ந்த உள்ளடக்கத்தை நெறிப்படுத்துவது தொடர்பாக ஃபேஸ்புக் நடந்துகொண்டவிதம் குறித்துத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அது மட்டுமல்லாமல், செல்வாக்கு மிக்க பயனாளிகளுக்காக ஃபேஸ்புக் தனது விதிகளையும் நெறிமுறைகளையும் தளர்த்திக்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஃபேஸ்புக்கின் பதில் பலவீனமாகவே இருக்கிறது. ஹாகன் சர்ச்சைக்கு ஃபேஸ்புக் பதிவு மூலம் விளக்கம் அளித்த ஸக்கர்பர்க், நிறுவனம் தவறாகச் சித்தரிக்கப்படுகிறது என்றும், நிறுவனம் பயனாளிகளின் நலனைவிட லாப நோக்கில் செயல்படுவதாகச் சொல்லப்படுவதை மறுத்தும் பதிவிட்டிருந்தார்.
ஃபேஸ்புக்கின் புதிய பெயரை மாற்றி அந்த நிறுவனம் அதன் மோசமான நெருக்கடிகளில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு "மெட்டா" என பெயரை மாற்றி இருக்கிறது. இருப்பினும் அடுத்த நிலைக்கு செல்ல போராடி வருகிறது. ஃபேஸ்புக் செயலிழப்பிலிருந்து திசைதிருப்பும் ஒரு முயற்சியாகத்தான் பெயரை மாற்றியுள்ளது என்று விமர்சகர்கள் பெயர் மாற்றத்திற்கான காரணத்தை கூறுகின்றனர்.