இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் முக்கிய சர்வரில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அடுத்த 48 மணி  நேரத்திற்கு உலகம் முழுவதும் இணையதள சேவையில் சிக்கல் ஏற்படலாம் என என ரஷ்யா டுடே செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ரஷ்யா டுடே செய்தி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் உலகம் முழுவதும் இந்த பாதிப்பு இருக்கும்  என்றும் பழுதுபார்ப்பு பணி தொடர்ந்து 48 மணி நேரம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இணையதளம்  பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இணையதள சேவை பாதிப்பு நிகழலாம். நெட்வொர்க் கட்டமைப்புகளும் பாதிக்கப்படும் என்று  தெரிவித்துள்ளது.


இன்டர்நெட் கார்பரேஷன் ஆப் அசைண்டு நேம்ஸ் அண்டு நம்பர்ஸ் (ICANN) என்ற அமைப்பு இந்த பழுதுபார்ப்புப் பணியை மேற்கொள்ள  உள்ளது. இணையத்தில் இருக்கும் தகவல்களை பாதுகாத்து வரும் cryptographic key மாற்றப்படும் என்று தெரிய வந்துள்ளது. சமீபத்தில்  தொடர்ந்து இணையதளங்கள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் நடப்பதால் cryptographic key மாற்றம் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

டொமைனில் இருக்கும் பெயர்கள் மற்றும் தகவல்களை பாதுக்காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை முறைப்படுத்தவும்,  பாதுகாக்கவும், நிலையான இணையதள சேவைக்கு இந்த பழுதுபார்ப்பு அவசியம் கூடுதலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இணையதள  சேவை அளிப்பவர்கள் இந்த மாற்றத்திற்கு தயாராகாவிட்டால் அவர்களது இணைப்பில் இருக்கும் வாடிக்கையாளர்கள் இணையதள  இணைப்பு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று தகவல் தொடர்பு ஒழுங்குறை ஆணையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதள பக்கங்கள் பெறுவது மற்றும் தகவல்கள் பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்படும் என்று 
தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு, இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள், சேவை முடக்கம் குறித்து முறையான 
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதபட்சத்தில் பாதிப்பு அதிகமாக இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.