கே.டி.எம். Vs பி.எம்.டபிள்யூ. - அட்வென்ச்சர் பிரிவில் மாஸ் யார் தெரியுமா?
அதிக அம்சங்கள் மற்று் உபகரணங்களை வழங்கி இருப்பதற்கு ஏற்ப கே.டி.எம். அதன் விலையையும் சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்து இருக்கிறது.
கே.டி.எம். இந்தியா நிறுவனம் மேம்பட்ட 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை சில தினங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. புதிய 390 அட்வென்ச்சர் மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 35 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிள் பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனத்தின் பி.எம்.டபிள்யூ. G 310 GS மோட்டார்சைக்கிள் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. G 310 GS மாடல் விலை ரூ. 3 லட்சத்து 05 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அம்சங்கள் அடிப்படையில் இரு மாடல்கள் எந்தளவு வழங்கி இருக்கின்றன என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஸ்டைலிங்:
எந்த மாடலை எடுத்துக் கொண்டாலும் ஸ்டைலிங் விவகாரம் ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பகளை சார்ந்தது ஆகும். இதோடு அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடல்கள் அதிக ஸ்டைலிஷ் லுக் கொண்டிருக்கும் என்றோ, இதனை தேர்வு செய்வோர் அதனை மட்டும் சார்ந்து மோட்டார்சைக்கிளை வாங்குவது இல்லை.
கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் டெயில் மற்றும் அப்ரைட் ஸ்டான்ஸ் உள்ளது. இந்த மாடல் ஒட்டுமொத்தமாக ரக்கட் தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் உயரமான விண்ட்ஸ்கிரீன், எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
பி.எம்.டபிள்யூ. G 310 GS மாடலில் அதிநவீன அம்சங்கள், எல்.இ.டி. இலுமினேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆஃப் ரோடு பயன்பாடுகளுக்காக இந்த மாடலில் பீக் வழங்கப்பட்டு இருக்கிறது. 390 அட்வென்ச்சர் மாடலில் பீக் வழங்கப்படவில்லை. அந்த வகையில் கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலுடன் ஒப்பிடும் போது பி.எம்.டபிள்யூ. G 310 GS சற்றே ஆஃப் ரோடு பிரெண்ட்லி மாடல் எனலாம்.
அம்சங்கள்:
கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் TFT ஸ்கிரீன், 2 டிராக்ஷன் மோட்கள், குவிக்ஷிப்டர், ஏ.பி.எஸ். மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. பி.எம்.டபிள்யூ. G 310 GS மாடலில் எல்.இ.டி. இலுமினேஷன் , ஃபுல் டிஜிட்டல் கன்சோல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படவில்லை.
என்ஜின்:
கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் 373சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, 4 வால்வுகள் கொண்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 42.3 ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. பி.எம்.டபிள்யூ. G 310 GS மாடலில் 313சிசி, சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 33.5 பி.ஹெச்.பி. பவர், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
மற்ற உபகரணங்கள்:
கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் யு.எஸ்.டி. ஃபோர்க்குகள், மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பி.எம்.டபிள்யூ. G 310 GS மாடலிலும் இதே செட்டப் வழங்கப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் 19 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. கே.டி.எம். மாடலில் 5-ஸ்போக் கொண்ட அலாய் வீல்கள் உள்ளன. பிரேக்கிங்கிற்கு கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் சிங்கில் டிஸ்க், லீன் சென்சிடிவ் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. பி.எம்.டபிள்யூ. அட்வென்ச்சர் மாடலில் கன்வென்ஷனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.
விலை விவரங்கள்:
அதிக அம்சங்கள் மற்று் உபகரணங்களை வழங்கி இருப்பதற்கு ஏற்ப கே.டி.எம். அதன் விலையையும் சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்து இருக்கிறது. கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 3 லட்சத்து 35 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. G 310 GS மோட்டார்சைக்கிள் விலை ரூ. 3 லட்சத்து 05 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் - ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.