மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அண்ணன் சரமாரி குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தை சேர்ந்தவர் திருமால் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது தம்பி ரவீந்திரன் அரிகரன். சென்ட்ரிங் வேலை செய்கிறார். இவருக்கு மனைவி, 2 மகள், ஒரு மகன் உள்ளனர். திருமால், தனது மனைவியை பிரிந்து தாய் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2016 ஆண்டு, ரவீந்திரனின் மகள், வீட்டில் தனியாக இருந்தார். அந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த அண்ணன் திருமால்,  அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் சொல்லப்படுகிறது. இதுகுறித்து, தந்தையிடம்  சொல்லி அழுதுள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த ரவீந்திரன் மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

போலீசார் வழக்கு பதிந்து திருமாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், திருமால், சிறையில் இருந்து வெளியே வந்தார். ‘‘மகள் என்றும் பாராமல் அண்ணனே இப்படி ஒரு இழிவான செயலில் ஈடுபட்டு விட்டாரே’’ என்று நினைத்து நினைத்து மனம் உடைந்த ரவீந்திரன், ஊரை காலி செய்து விட்டு  வெளியூருக்குச் சென்று விட்டார்.

ஆனாலும், அண்ணனை  பழிவாங்கியே தீரவேண்டுமென  வெறித்தனமாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருமால் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது தாய் மற்றும் மகள், சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்றிருந்தனர். திருமால், தனியாக இருப்பதை அறிந்து கொண்ட ரவீந்திரன், வீட்டுக்குள் புகுந்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் திருமாலையை சரமாரியாக குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் வலி தாங்காமல் திருமால் அலறித் துடித்தார். 

சத்தம் கேட்டு தாய் மற்றும் மகள் அலறியடித்து கொண்டு ஓடிவந்தனர். திருமால் ரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் அதற்குள், திருமால் துடி துடித்து இறந்து விட்டார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலிஸ், திருமாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான ரவீந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.