உலகிலேயே மிகப் பெரிய சிவலிங்கம் !! ரெடியாகிறது குமரி – கேரள எல்லையில்….
கன்னியாகுமரி – கேரள எல்லையில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் அமைக்கப்பட்டு வருக்றது. விரைவில் இது பக்தர்களின் தரிசனத்துக்கு திறந்து வைக்கப்பட உள்ளது.
குமரி -கேரள எல்லை பகுதியான உதயம்குளம்கரையில் வரலாற்று சிறப்புமிக்க செங்கல் மகேஸ்வர சிவபார்வதி கோவில் உள்ளது. இங்கு கடந்த 2012 -ம் ஆண்டு உலகில் மிக உயரமான சிவலிங்கம் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக மகேஸ்வரானந்தா சரஸ்வதி சுவாமிகள் இந்தியாவின் பல்வேறு சிவன் கோவில்களில் சென்று அந்த கோவிகளின் மாதிரியை கொண்டு வந்து பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த சிவலிங்கம் 111.2 அடி உயரத்தில் எட்டு நிலைகளை கொண்டு உள்ளது. ஒவ்வொரு நிலையிலும் தியான மண்டபங்கள் உள்ளன.
இந்த சிவலிங்கத்தின் உள்ளே குகைக்குள் செல்வது போன்றும், பரசுராமர் அகத்தியர் உள்பட பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளே தரை தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் சிவலிங்க சிலையும், மேல் பகுதியான 8-ம் நிலையில் கைலாய மலையில் சிவன் பார்வதி குடிகொண்டு இருப்பது போன்றும் அழகிய சிலையுடன் கட்டப்பட்டு உள்ளது.
தற்போது 80 சதவீதம் பணிகள் நிறைவேறி உள்ளது. இந்த சிவலிங்கம், உலகில் மிக உயரமான சிவலிங்கம் என தேர்வாகி, ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்டு‘ என்ற சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்து உள்ளது. இதற்கான சான்றிதழை அதன் நிர்வாகி சாகுல்அமீது தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வழங்கினர்.
இந்த சிவலிங்கம் வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதி மகாசிவராத்திரி அன்று திறக்க திட்டமிட பட்டுள்ளது.