பேய் ஓட்டுகிறேன் என்ற பெயரில், பெண்களை வசியம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்வதை சாமியார்கள் பலரும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். 

இந்தியாவில் நாளுக்கு நாள் சாமியார்களின் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக, அரசு எந்த கடும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் அதிருப்தி கூறப்படுகிறது. 

அதேசமயம், சாமியார்களின் பாலியல் தொல்லை பற்றி நாளுக்கு நாள் ஊடகங்களில் செய்தி வெளியானபோதிலும், இளம்பெண்கள் பலர் போலி சாமியார்களை நம்பி, ஏமாறுவது தொடர்கதையாகவே நீடிக்கிறது. 

’கடவுளின் நேரடி ஆசிர்வாதம் பெற்ற சாமியார்களால், தீராத நோயை குணப்படுத்த முடியும். பேய், பிசாசில் இருந்து காப்பாற்ற முடியும்,’ என பெண்கள் நம்புவதே, இதற்கு முக்கிய காரணமாகும். எவ்வளவு புத்திமதி சொன்னாலும், சாமியார்களை பெண்கள் நம்பிச் செல்வதை மாற்றிக் கொள்வதில்லை. 

இந்த வரிசையில், மும்பையில் உள்ள சில சாமியார்கள், பேய் ஓட்டுகிறேன் என்ற பெயரில், பெண்களை வசியம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதில் பலர் சிக்கினாலும் இன்னும் இந்த கதை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. அப்படியான சில சம்பவங்களை பற்றி இங்கே பார்க்கலாம். 

முதலில் சிக்கிய சாமியார் மும்பையின் வடக்கே உள்ள போவய் பகுதியைச் சேர்ந்தவர். இவர், தனது 17 வயது மகளை தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக, பெண் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். 2012ம் ஆண்டு முதலாக, பேய் ஓட்டுகிறேன் என்ற பெயரில், அந்த சிறுமியை சாமியார் பலாத்காரம் செய்வதாகவும், அவரது தாயார் தனது புகாரில் கூறியுள்ளார். ஆனால், இதுபற்றி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இரண்டாவதாக, டிவி சீரியல் நடிகை ஒருவர் ஏமாந்த கதையை பார்க்கலாம். சார்கோப் பகுதியில் உள்ள சாய் பாபா சீடராக செயல்பட்டு வரும் சாமியார் ஒருவர், தன்னிடம் வந்த டிவி சீரியல் நடிகையை லாட்டரி சீட்டில் வெற்றிபெறச் செய்வதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், ரூ.26 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு, ஏமாற்றியுள்ளார். இதுபற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். 

இதேபோல, வீட்டு வேலைக்கு வந்த 30 வயது பெண்ணை, வீட்டுக்குச் சொந்தக்காரர் பிளாக் மேஜிக் செய்வதாகக் கூறி, பாலியல் வல்லுறவு செய்ய முயன்றுள்ளார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். 

மேலும், வசை பகுதியை சேர்ந்த சாமியார் ஒருவர் வீட்டு பிரச்னைக்காக தன்னிடம் வந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். 

இதில் உச்சக்கட்டமாக நடந்த வழக்கு 2007ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம்தான். டெலிபோன் ஆபரேட்டராக உள்ள இளம்பெண்ணை, அவரது முதலாளி, பேய் ஓட்டுவதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை செல்போனில் படம்பிடித்து, அதைக் காட்டியே தொடர்ந்து வல்லுறவு செய்து வந்துள்ளார். இதையடுத்து, போலீஸ் புகார் பதிவு செய்து, நடவடிக்கை எடுத்தனர். 

இப்படியாக, நாளுக்கு நாள் சாமியார்களின் அட்டகாசம் மும்பையில் தீர்ந்தபாடில்லை. பேய் ஓட்டுகிறேன் என்ற பேரில், அவர்கள் செய்யும் லீலைகளை தடுக்க, அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பிரச்னை தீரும் என்று, சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்