பாஜக கொடிக்கம்பம் விழுந்து பெண் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
பாஜக கொடிக்கம்பம் விழுந்து பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
நாடே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது. தமிழ்நாடு உள்பட 102 தொகுதிகளுக்கு அன்றைய தினம் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள வாக்குப்பதிவு வருகிற ஜூன் மாதம் 1ஆம் தேதி நிறைவடைகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம் என அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே, அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி விட்டன. பிரதமர் மோடி மட்டும் இதுவரை 5 முறை தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
அந்தவகையில், தேர்தல் பிரசாரத்துக்காக பாஜக ஆங்காங்கே பிளக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைத்துள்ளது. இந்த நிலையில், பாஜக கொடிக்கம்பம் விழுந்து பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கொருக்குப்பேட்டையில் பாஜக கூட்டம் நேற்று இரவு நடந்து கொண்டிருந்தது. அதற்காக கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு கொடிக்கம்பம் திடீரென சரிந்து விழுந்துள்ளது. அப்போது, அவ்வழியாக இரு சக்கர சென்ற விஜயா என்ற பெண் மீது அந்த கொடிக்கம்பம் விழுந்ததில், அவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரது முகம், கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.
முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் அண்னாமலை: அதிமுக நிர்வாகி ஆவேசம்!
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது கண்ணில் காயம் ஏற்பட்டு கடுமையான ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பாஜக கொடி கம்பம் விழுந்து ஒருவர் படுகாயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.