திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே உள்ள தோட்டத்து சாலை வீதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் -தமிழ் இசக்கி தம்பதி. கணவர் விசைத்தறி தொழிலாளியாக பணிபுரிந்து வரும் நிலையில், அவரது மனைவி பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு சிவன்யா ஸ்ரீ என்ற இரண்டரை வயது மகள் இருந்தார். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையை சந்தேகம் புரட்டிப் போட்டது.

கணவர் மீது சந்தேகமடைந்த தமிழ் இசக்கி அவரிடம் சண்டை போடுவதை வாடிக்கையாக்கியுள்ளார். கணவன், மனைவி இருவருக்குமான சண்டை அவர்களுக்கு இடையேயான விரிசலை அதிகரித்தது. மனைவியுடன் பேசுவதை நிறுத்திய நாகராஜ், தனது மனைவியின் தொலைபேசி அழைப்புகளை தவிர்த்து வந்தார். இதனால் விரக்தியடைந்த தமிழ் இசக்கி குழந்தையை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, குழந்தையை வீட்டிலிருந்த தண்ணீர் டிரம்முக்குள் முக்கி, மூச்சடைக்கச் செய்து கொலை செய்துள்ளார். தண்ணீரிலிருந்து உயிரிழந்த குழந்தையை வெளியே எடுத்து, கட்டிலில் கிடத்திய தமிழ் இசக்கி, தான் தற்கொலை செய்வதற்காக மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொள்ள முயற்சித்துள்ளார்.

அந்த நேரத்தில் கணவர் வீட்டிற்குள் வந்துள்ளார். செய்வதறியாது திகைத்த தமிழ் இசக்கி,யாரோ வீட்டிற்குள் வந்து குழந்தையை கொன்றுவிட்டதாக நாடகமாடினார்.

இந்நிலையில் நாகராஜ் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் போலீசார் சந்தேகத்திற்கிடமான கொலையாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் முன்னுக்கு பின் முரணாகப் பேசிய தமிழ் இசக்கி , ஒரு கட்டத்தில் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகவும், கணவர் திடீரென்று வீட்டிற்கு வந்ததால் அவரிடமிருந்து தப்பிக்க பொய் சொன்னதாகவும் தமிழ் இசக்கி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

தங்களது சுயநலத்துக்காக குழந்தைகளை கொல்லும் கலாச்சாரம் தமிழகத்தில் பெருகி வருவது  பொது மக்களிடையே அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே கள்ளக் காதலுக்காக தான் பெற்ற குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற அபிராமியில் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது தமிழ் இசக்கி என்ற இளம்பெண் கணவன் மீது இருந்த சந்தேகமே அவரது வாழ்கையை சீரழித்துள்ளது.