மருத்துவம் படிக்காமல் தவறாக கருக்கலைப்பு செய்ததால் கல்லூரி மாணவி உயிரிழந்தது சம்பந்தமாக கைதான போலி பெண் டாக்டரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் பொம்மியம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். முன்னாள் ராணுவ வீரர். இவரது மகள் ஈவா. தனியார் கல்லூரியில் படித்து வந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் இவருடன் படிக்கும் மாணவனை காதலித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே,  ஈவா கர்பமாக இருந்துள்ளார். இதனை அடுத்து தீவட்டிப்பட்டி அருகே உள்ள நடுப்பட்டி கொல்லர் தெருவில் வசித்து வந்த சுல்தானா என்பவரிடம் கடந்த 11 நாட்களுக்கு முன்பு கருகலைப்பு செய்தார்.

கருக்கலைப்பிற்கு பிறகு ஈவாவிற்கு கடும் வயிற்று வலியும், ரத்த போக்கும் ஏற்பட்டதால் 29-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் 31-ந் தேதி பரிதாபமாக பலியானார்.

இதனையடுத்து, பிரேதப் பரிசோதனையில் ஈவாவின் சாவுக்கான காரணம் குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்த போது தவறான கருக்கலைப்பு செய்ததால் ஈவா இறந்துள்ளதாக தெரிகிறது. சம்பவம் குறித்து அவரது பெற்றோரிடம் விசாரித்த போது தீவட்டிப்பட்டி அருகே நடுப்பட்டியில் சுல்தானா என்ற பெண் ஈவாவுக்கு கருக்கலைப்பு செய்ததும், மருத்துவம் படிக்காமல் தவறான முறையில் கருகலைப்பு செய்ததால் அவர் இறந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த போலி கருகலைப்பு டாக்டர் சுல்தானா வீட்டில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது வீட்டிலேயே கிளீனிக் வைத்து படுக்கை வசதியுடன் போலி மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. மேலும் கருக்கலைப்புக்கு பயன்படுத்திய ஊசி, கையுறை, குளுக்கோஸ் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துணை இயக்குனர் வளர்மதி அளித்த புகாரின் பேரில் போலி மருத்துவர் சுல்தானாவை தீவட்டிபட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த சுல்தானா கடந்த 15 ஆண்டுகளாக வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளித்தது விசாரணையில் வந்தது. மேலும் வேறு நபர்களும் இதே போல தவறான சிகிச்சையால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இதனையடுத்து கருகளைப்பால் உயிரிழந்த ஈவா கர்ப்பத்திற்கு காரணம் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.